திண்டுக்கல் அருகே, விவசாயம் செழிக்கவும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறவும் வாழைப் பழங்களை சூறைவிடும் வினோத திருவிழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ளது சேவுகம்பட்டி கிராமம். விவசாயம் ஒன்றையே பிரதான தொழிலாகக் கொண்ட இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள், விவசாயம் செழிக்கவும், தங்கள் வேண்டுதல் நிறைவேறவும் ஆண்டுதோறும் தை மாதம் 3ம் தேதி வாழைப் பழங்களை சூறைவிடும் திருவிழா நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று முன் தினம் (17ம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி, மக்கள் தங்கள் வீடுகளில் வாழைப்பழங்களை படைத்து, தங்களின் குறைகளை நிவர்த்தி செய்யும்படியும், விவசாயம் செழித்தோங்கவும் பெருமாளை வேண்டி பூஜை செய்தனர்.
பின்னர், தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பெருமாளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அந்த பழங்களை, மேளதாளம் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஊரின் எல்லை தெய்வமான ரெங்கம்மாள் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தினர். இதையடுத்து அந்த பழங்களை கூடை மற்றும் பெரிய பாத்திரங்களில் நிரப்பி, 300 ஆண்டு பழைமையான சோலைமலை அழகர் பெருமாள் கோயிலுக்கு கொண்டுவந்து, அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
அதன்பின்பு, பழக் கூடைகள் அனைத்தும் கோயிலின் மேற்புறத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சூறை விடப்பட்டது. அப்போது கீழே விழுந்த வாழைப்பழங்களை, பெருமாளின் பிரசாதமாக எண்ணி வயது வித்தியாசம் இன்றி அனைவரும் எடுத்துச் சென்றனர். இந்த திருவிழாவில், வெளியூர்களில் வசிக்கும் இந்த ஊரைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.






