தவறான தகவல்: பேருந்தை பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு!

நெல்லை மாவட்டம் பணகுடியில் அரசு பேருந்து ஓட்டுநர்,  குடித்து விட்டு பேருந்தை இயக்குவதாக, அதில் பயணித்த மர்ம நபர் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தவறான தகவல் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோயிலிலிருந்து சுமார் 8:00 மணிக்கு குமுளி நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து, ஆரல்வாய்மொழி தாண்டி சென்றுகொண்டிருந்த போது, அதில் பயணம் செய்த மர்ம நபர் ஒருவர்  இந்த பேருந்தின் ஓட்டுநர் மது அருந்தி விட்டு பேருந்தை இயக்குவதாகவும், இதனால் பாதுகாப்பற்ற பயணமாக உள்ளது என்றும், தனது செல்போன் மூலம் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கூறியுள்ளார்.

இதனால் பதறிப்போன மாவட்ட காவல்துறை உடனடியாக பணகுடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, அந்த அரசு பேருந்தை உடனடியாக நிறுத்தி சோதனை செய்யுமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து சுமார் 8:40 மணிக்கு பணகுடி பேருந்து நிலையத்திற்கு வந்த அந்த பேருந்தை, பேருந்து நிலையதிற்குள் சுமார் 30 நிமிடங்கள் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டதால், பேருந்தில் இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநரிடம் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது அவர் மது போதையில் இல்லாததும், அவரிடம் மது அருந்தியதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. இதனையடுத்து, இந்த புகார் தவறானது என தெரியவந்ததை தொடர்ந்து, பேருந்து விடுவிக்கப்பட்டது.

மேலும் ஒரு சில மர்ம நபர்கள் இது போன்ற தவறான தகவல்களை கூறி போலீசையும், பொதுமக்களையும் அலைகழித்து வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் பயணித்த பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.  இதனையடுத்து இந்த புகார் கொடுத்த மர்ம நபர் யார்? என்ன காரணத்திற்காக ஓட்டுநர் மீது புகார் தெரிவிக்க வேண்டும்? ஏதேனும் முன்பகை காரணமா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வரும் பொலீசார், மர்ம நபர் பேசிய செல் போன் நம்பரை வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்திற்கு  உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இது போன்ற தவறுகளையும், அலைகழிப்பு சம்பவங்களையும் தடுக்க முடியும் என் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.