தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமண ஆசை கூறி பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரது தாய் கோவையில் உள்ள மில் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தாய், மகள் இருவரும் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊத்தங்கரைக்கு புத்தாடை வாங்க சென்றுள்ளனர்.
பேருந்தில் வந்தபோது மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த தாய், அங்கிருந்தவர்கள் உதவியுடன் மகளை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இந்த நிலையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கருவுற்றிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது.
இதனைத்தொடர்ந்து மாணவிக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டது. எனவே அங்கிருந்து மருத்துவர்கள் அவரை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் தாயார், கல்லாவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில், புங்கனை பகுதியைச் சேர்ந்த தமிழரசன்(38) என்பவர்தான் தனது மகள் கர்ப்பத்திற்கு காரணம் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதன்பேரில் பொலிசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, தலைமறைவான தமிழரசனை தேடி வருகின்றனர்.
தமிழரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.






