எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றபட்ட தமிழகத்தின் சாத்தூர் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் மதுரை அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக குறித்த பெண்மணி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவர் குழு கண்காணிப்பில் இருந்த சாத்தூர் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் எட்டு மாத கர்ப்பிணியான மீனா என்பவர் கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
பரிசோதனையில், ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி, சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து, ரத்தம் வாங்கி அவருக்கு ஏற்றியுள்ளனர்.
நான்கு நாட்களுக்கு பின்னர் மீனாவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதனை செய்ததில், அவரது ரத்தத்தில் எச்ஐவி தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, விருதுநகர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சோதனை செய்ததில் அப்பெண்ணுக்கு ரத்தத்தில் எச்ஐவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குனருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது விசாரணையில், அப்பெண்ணுக்கு சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து வாங்கி ஏற்றிய ரத்தத்தில், எச்ஐவி தொற்று இருந்தது தெரிய வந்ததது.
இதனையடுத்து ரத்தம் கொடுத்த நபரை விசாரித்ததில் அவருக்கு எச்.ஐ.வி. இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
பின்னர் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றபட்ட சாத்தூரை சேர்ந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது வந்தது. இந்நிலையில் தற்போது அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.






