தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசாக பொங்கல்பொருட்களும், ரூ.1000 ரொக்கமும் வழங்க உத்தரவிட்டதோடு, கடந்த சனிக்கிழமை சென்னையில் தமிழக முதல்வர் பயனாளிகளுக்கு பரிசுத் தொகுப்பை வழங்கி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் ஞாயிறன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சாத்தூர் பகுதிகளில் பொங்கல் தொகுப்பை அனைவருக்கும் வழங்கினார்.
ஆனால் அவர் வழங்கிய மறுநாள் திங்கட்கிழமை ரேசன் கார்டுதாரர்கள் கடைக்கு சென்று கேட்டபோது, பொங்கல்பொருட்கள் வரவில்லை எனக்கூறி அலைக்கழிக்கின்ற நிலை உள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை வரை திருவில்லிபுத்தூர் ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கவில்லை.
இதுகுறித்து வட்ட வழங்கல் துறை வருவாய் ஆய்வாளரிடம் கேட்டபோது, பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் பிரித்து கடைகளுக்கு கொடுப்பதில் சிரமம் உள்ளது.
இன்று முதல் அனைத்து கடைகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மக்களை அலையவிடாமல் உடனடியாக பொங்கல் தொகுப்பு பொருட்களையும், ரூ.1000 ரொக்கத்தையும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ரேசன் கடையில் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு பதிலாக வெறும் 500 ரூபாய் மட்டுமே வழங்கி மக்களை ஏமாற்றியுள்ளனர்.
அதிக அளவிலான பணப்புழக்கம் ரேசன் கடைகளில் இடம்பெறுவதால் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், அரசு சரியான திட்டமிடுதலுடன் பொங்கல் பரிசை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.