மாயமான சிறுமி… கதறும் தாயார்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 மாதங்களுக்கும் மேலாக துப்புத் துலங்காமல் திணறடித்த சிறுமி கடத்தல் வழக்கில் மர்மநபர் ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் முதன்முறையாக வெளியிட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மா தம்பதிகளின் இரண்டு வயது மகள் ஹரிணி.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாசி மணிகள் விற்கப்போன அவர்கள் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி ஹரிணி காணாமல்போக, பதறிப்போன அந்தத் தம்பதி, அணைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

அதோடு, ‘ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தைவிட்டுப் போகமாட்டோம்’ என்று அங்கேயே தங்கி உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை மூன்று தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடி வந்துள்ளனர்.

இருப்பினும் ஹரிணி தொடர்பில் நம்பிக்கை தரும் எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது.

இதற்கிடையில், காளியம்மாள் ஒன்பது மாத இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமப்பதால், ஹரிணி காணாமல்போன துக்கத்தோடு அவர் இருப்பது அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஹரிணி தொடர்பில் தகவல் அறிந்த லதா ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காலியம்மாள் தம்பதிக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

அதோடு, மும்பையில் ஹரிணிபோல் இருக்கும் ஒரு குழந்தை பற்றியும் அதை மீட்க தனது பீஸ் ஆப் சைல்டு அமைப்பு மூலம் முயல்வதாகவும் குறிப்பிட்டார்.

இதனால், சுறுசுறுப்படைந்த காஞ்சிபுரம் காவல்துறையும் அணைக்கட்டு காவல்நிலைய பொலிசாரும் ஹரிணியைக் கடத்திய நபரை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.