பிரான்சில் மேக்ரான் யுகம் முடிவுக்கு வருகிறதா?

பிரான்சில் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் நாட்டின் அமைதியைக் குலைத்துவிட்ட நிலையில், பிரான்சின் முன்னாள் ஜனாதிபதியின் உதவியை இமானுவல் மேக்ரான் நாடியிருப்பது பிரான்ஸ் அரசியலில் உற்று நோக்கப்படுகிறது.

ஜார்ஜியாவின் புதிய அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அரசு சார்பாக பிரான்சின் முன்னாள் ஜனாதிபதியான சார்க்கோஸி அனுப்பி வைக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் மாதம் 7ஆம் திகதி இமானுவல் மேக்ரானும் சார்க்கோஸியும் Elysee Palaceல் சந்தித்து பேசினர்.

அவர்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் வரி தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

நாடு குழப்பமான சூழலில் இருக்கும் நேரத்தில், திடீரென மேக்ரான், முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளதால், மேக்ரான் பின்வாங்குகிறாரா? மேக்ரான் யுகம் முடிவுக்கு வருகிறதா? என்னும் கேள்விகள் எழுந்துள்ளன.

வலது சாரியினரான சார்க்கோஸியின் ஆதிக்கம் மேக்ரானின் மீது அதிகரிப்பதை இந்த நடவடிக்கைகள் காட்டுவதாகவும் கருதப்படுகிறது.

இமானுவல் மேக்ரானுக்கு நெருக்கமான ஒருவர், சார்க்கோஸியிடமிருந்து தனிப்பட்ட வகையிலும் அரசியல் ரீதியிலும் நன்மை பெற இயலும் என மேக்ரான் புரிந்து வைத்துள்ளதாக தெரிவிக்கிறார்.

அதே நேரத்தில் சார்க்கோஸிக்கு நெருக்கமானவர்கள், பற்றியெரியும் பாரீஸ் காட்சிகளைக் கண்டு அதிர்ந்து போயுள்ள வலது சாரி வாக்காளர்களுக்கு ஒரு நல்ல சமிக்ஞையை காட்டுவதற்கான வழியாக இதைப் பார்க்கின்றனர்.

அதே நேரத்தில், அந்த சந்திப்பின் பின்னணியில் ஒரு அரசியல் உள் நோக்கம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

அதாவது சார்க்கோஸியின் கட்சியான Republicans கட்சித்தலைவரான Laurent Wauquiezஐ மட்டம் தட்டி சார்க்கோஸியை முக்கியத்துவப்படுத்தும் நோக்கத்துடன் அவரை இமானுவல் மேக்ரான் முன் கொண்டுவருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.