இரவு நேரத்தில் பள்ளிக்குள் நடக்கும் கலாச்சார சீர்கேடு..?

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள இளையாளூர் ஊராட்சி அரங்கக்குடியில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான அரசு உயர்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளையாளூர் ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சுமார் 250 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வாருகின்றனர்.

இப்பள்ளி 1893 இல் குருக்குலப் பள்ளியாக தொடங்கப்பட்டு, 1957 இல் நடுநிலைப்பள்ளியாகவும் 2011 இல் உயர்நிலைப்பள்ளி யாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் காமராசரின் தனிச்செயலர் அரங்கக்குடி அப்துல் அஜீஸ், சட்டப்பேரவை மேலவை முன்னாள் உறுப்பினர் பக்கர் மற்றும் ஏராளமான சமூக பெரியவர்கள் பயின்ற இப்பள்ளிக்கு 2014-15 இல் 1 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

ஆனால், மாணவர்களுக்கு தேவையான அளவு வகுப்பறை கட்டிடம் கட்டப்படாததால் மாணவர்கள் வராண்டாவில் பாடம் கற்பிக்கும் நிலை உள்ளது. அதேபோன்று பள்ளியை இணைக்கும் சாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் கிடப்பிலேயே உள்ளது.

பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்காததால் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாளும் உடைந்த மதுபாட்டில்களை ஆசிரியர்களும், மாணவர்களும் அகற்றி சுத்தம் செய்துவிட்டு வகுப்புக்கு செல்லும் அவலம் தொடர்கிறது என கூறும் சமூக ஆர்வலர் அரங்கக்குடி ஹாஜா சுற்றுசுவர் இல்லாததால் ஆடு,மாடு போன்றவைகளுக்கு கொட்டகையாகவும் பள்ளிக்கூடம் மாறியுள்ளது.

அன்றாடம் அசுத்தங்களை ஆசிரியர்களும், மாணவர்களும் சுத்தம் செய்வதை காணமுடிகிறது. 125 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்வதோடு, சுற்றுச்சுவர் அமைத்து, 125 ஆண்டுகள் நினைவு வளைவு அமைத்து பள்ளியின் வரலாற்றை வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். நீட் தேர்வு கோச்சிங் சென்டராகவும் உள்ள இப்பள்ளியை தமிழக அரசு கவனிக்குமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.