திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 12 ஏக்கர் பொது மக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் மேலும் பல காணிகளை விடுவிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போஹல்லாகம தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மக்களது காணிகள் விடுவிக்கும் நிகழ்வானது, கிழக்கு மாகாண ஆளுனரது செயலகத்தில் இன்று மதியம் 2.00 மணிக்கு இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 12 ஏக்கர் மக்களது காணிகளை இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருண ஐயசேகர கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லாகமவிடம் கையளித்தார்.
குச்சவெளி பிரதேச சபைக்குற்பட்ட கல்லம்பத்தை எனும் பகுதியில் 5 ஏக்கர் காணிகளும் மூதூர் பிரதேச செயலக்ப்பிரிவில் பாட்டாளிபுரம் பகுதியுல் 2 ஏக்கர் காணிகள் மற்றும் தோப்பூர் பகுதியுல் 3 ஏக்கர் காணிகளும், சேருநுவர பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட சித்தாறு பகுதியில் 2 ஏக்கர் காணிகளும் அடங்கலாக மொத்தமாக 12 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லாகம நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே மக்களின் காணிகளை இராணுவத்தினர் கைப்பற்றி வைத்திருந்தாக குறிப்பிட்டார்.இராணுவம் ஒருபோதும் தேவையின்றி இடங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். இராணுவத்தினர் தேவையின் அடிப்படையிலேயே தமது கடமைகளில் ஈடுபடுவார்கள். நாட்டுக்கு பாதுகாப்பு தேவையெனின், அதனையடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நிலப்பரப்பினை அவர்கள் வசம் வைத்துக் கொள்வர்.
இன்று கிழக்கில் மக்களுக்கு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் மங்களகரமான விடயமாக இது கருதப்படுகிறது. இந்த செயற்பாடு கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்துடன் நிறைவடையப்போவதில்லை. ஜனாதிபதியும் நானும் கிழக்கு மாகாணத்தில் படையினர் மற்றும் பொலிஸார் வசமுள்ள காணிகள் தொடர்பில் மதிப்பீடு செய்து அவற்றை மீண்டும் மக்களுக்கு வழங்கக்கூடிய இடங்களை உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பொறுப்பினை வகிக்கின்றோம்.இந்நிலையில், டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இதேபோல மேலும் பல காணிகளை மக்கள் வசம் ஒப்படைப்போம் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன்.






