சீதனமாக வழங்கப்பட்ட 13 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா!

வெல்லவாய பிரதேசத்திலிருந்து கண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணப்பெண் ஒருவருக்கு சீதனமாக 13 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா போதைப் பொருள் பஸ் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட போது பொலிஸார் அதனை கைப்பபற்றியுள்ளனர்.

உடுநுவர வெலம்பொட பொலிஸார் குறித்த கஞ்சா போதைப் பொருளையும், அதனை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

திருமண வீட்டுக்காக கொண்டு செல்லப்படும் சீதனப் பலகாரப் பெட்டிகள் என்ற போர்வையில் கார்ட்போர்ட் பெட்டிகளில் இந்தப் போதைப் பொருள் பொதியிடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கண்டியை மையமாகக் கொண்டு கம்பளை, பேரதனை, கெலிஓயா உள்ளிட்ட மத்திய மாகாணத்தின் பல இடங்களுக்கு வெல்லவாய பிரதேசத்திலிருந்து கஞ்சா போதைப் பொருள் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பஸ்ஸில் பயணம் செய்த குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணை செய்த போது மணப் பெண் ஒருவருக்கான சீதனப் பொருட்கள் அடங்கிய பெட்டிகளை வெல்லவாயவிலிருந்து கண்டிக்கு எடுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கஞ்சா போதைப் பொருள் அடங்கிய பதின்மூன்று பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதன் சந்தைப் பெறுமதி 13 லட்சம் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.