சில முக்கியமான சமையல் குறிப்புகள் உங்களுக்காக:-
* பீட்ரூட் அல்வா, பீட்ரூட் திரட்டுப்பால் செய்யும்போது பீட்ரூட்டின் சிவப்பு நிறம் மாறாமலிருக்க, அதை வினிகரில் முக்கி எடுத்து அந்த நீரை வடிகட்டிய பின்பு நறுக்க வேண்டும்.
* செவன் கப் கேக் செய்யும்போது முந்திரி, பாதாம் பருப்பை பாலில் ஊறவைத்து அரைத்து சேர்த்துக் கொண்டால் கேக் சூப்பராக இருக்கும்.
* முறுக்கு, ரிப்பன் பக்கோடா, சீடை மொறுமொறுவென்று இருக்க சிறிது கார்ன்ஃப்ளார் மாவு சேர்த்து பிசைந்தால் போதும்.
* கற்கண்டு வடை செய்ய மாவை அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து செய்தால் எண்ணெய் குடிக்காது. தண்ணீர் அதிகம் ஆகி எண்ணெயைக் குடித்தால் சிறிது பச்சரிசி மாவு சேர்த்து பிசைந்து தட்டவும்.
* மைசூர்பாகு செய்யும்போது சிறிது பாதாம்பருப்பை ஊறவைத்து கடலைமாவுடன் கிளறினால் கடை மைசூர்பாகு போல் நைசாக வரும்.
* உளுந்து வடைக்கு ஊறவைக்கும் போது ஒரு ஆழாக்கு உளுந்துக்கு ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து அரைத்து தட்டினால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
* மைசூர்பாகு செய்யப் போகிறீர்களா? கடலை மாவை நெய் விட்டு லேசாக வறுத்துப் பிறகு மைசூர்பாகு செய்தால் மணம் தூக்கலாக இருக்கும். மைசூர்பாகினை இறக்கும்போது ஒரு சிட்டிகை சமையல் சோடா தூவி கிளறிக் கொட்டினால் மைசூர்பாகு பொறு பொறுவென்று இருக்கும்.
* தேங்காய் பர்ஃபி செய்யப் போகிறீர்களா? முக்கால் பதம் வந்தவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் அரை கப் விட்டுக் கிளறினால் மிருதுவாகவும் மைசூர்பாகு போன்ற அபார ருசியுடனும் இருக்கும்.
* ரவா லட்டு செய்யும்போது அதனுடன் அவலையும் மிக்சியில் ரவை போலப் பொடித்து நெய்யில் வறுத்துச் சேர்த்து 3 டேபிள்ஸ்பூன் பால் பவுடரையும் கலந்தால் டேஸ்ட்டியான ரவா லட்டு பிடிக்கலாம்.






