திட்டமிட்ட நாடகமா?! ஸ்டாலினே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

திமுக கூட்டணியில் குழப்பம் உண்டானது போல திமுக பொருளாளர் துரைமுருகன் அண்மையில் தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுக்க, கூட்டணி கட்சிகள் என கூறிக்கொண்டு திமுகவோடு இருந்த விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கலக்கம் அடைந்தன. உடனே திக்கும் தெரியாமல், திசையும் தெரியாமல் அந்த தோழமை கட்சிகள் இரண்டு மூன்று நாட்களாக வலம் வந்தன.

இதற்கிடையே, நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் நாங்கள் கூட்டணியில் இடம்பெறுவோம் என திருமாவளவன் பேட்டியளித்தார். இந்த சந்திப்பின் போது ஸ்டாலினுடன் திமுகவினர் யாரும் இல்லை எனபது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொருளாளர் துரைமுருகனும் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பின்னர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது திமுக பொருளாளர் துரைமுருகனும், திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளதா? என்ற கேள்விக்கு ஸ்டாலின் பதிலளித்தார். அதில் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என்னை சந்தித்துவிட்டு சென்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து சென்றுள்ளார். ஏற்கனவே மதிமுக சார்பில் வைகோ அவர்கள் நடத்திய மாநாட்டில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் பங்கு கொண்டார். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அடுத்த மாதம்நடைபெற உள்ள மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு வந்துள்ளது.

எங்கள் கூட்டணியில் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு இதை பேசி பேசி எங்களுக்கு பெருமை தேடித் தந்த ஊடகங்களுக்கு நன்றி என ஸ்டாலின் கூறினார். ஆனால் இதெல்லாம் திட்டமிட்ட நாடகமோ என்ற சந்தேகம் யாருக்கும் எழாமல் இல்லை.

ஏனென்றால் திமுக அனைத்து கட்சி கூட்டம், தோழமை கட்சி கூட்டம் என அடிக்கடி நடத்தினாலும் அது மக்கள் மத்தியிலோ, திமுகவினர் மத்தியிலோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதே நிலையில் கூட்டணி தொடர்ந்தால் வெற்றி என்பது கேள்விக்குறி தான் என திமுகவில் புகைச்சல் எழ ஆரம்பித்துவிட்டது.

இதனை சரிகட்ட நினைத்தவர்கள் துரைமுருகனின் பேச்சு மூலம் அச்சாரம் போட்டதாகவும், அதன்மூலம் வெளியுலக வெளிச்சத்தில் விசிக, மதிமுக போன்ற கட்சிகள் பலம் வாய்ந்த கட்சிகள் போல கட்டமைக்கப்பட்டு மீண்டும் சந்திப்பை நடத்தி கூட்டணியை புது அணியாக உருவாக்க தான் இத்தனையும் நடந்ததா என்பது தான் அனைவரின் சந்தேகமாக உள்ளது.

திமுகவும் கூட்டணி இல்லாமல் இதுவரை தேர்தல் சந்தித்த வரலாறு இல்லை என்பதால் இந்த கட்சிகளை விட்டாலும் திமுகவினருக்கு வேறு வழியில்லை. பெரிய கூட்டணி இல்லை என்றால் மீண்டும் 40 தொகுதிகளும் தோல்வியடைய கூட நேரிடும் என்ற பயமும் திமுகவிடமும் இல்லாமல் இல்லை.