200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்துக்கு வருகின்ற 7-ந்தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. உத்தர பிரதேசத்தில் முதன்மை கட்சியாக விளங்கும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.
ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கார் தொகுதியில் பிஎஸ்பி சார்பில் லட்சுமணன் சிங் (வயது 62) வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மேலும் 21 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். லட்சுமணன் சிங்கி இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதனால் ராம்கார் தொகுதிக்கு வருகிற 7-ந்தேதி மற்ற தொகுதிகளுடன் தேர்தல் நடக்காது என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து ராம்கார் தொகுதி தேர்தல் அதிகாரி பங்கஜ் குமார் கூறியவை, ‘பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமணன் சிங் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். ஒரு வேட்பாளர் மரணம் அடைந்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தலுக்கான மறுதேதி அறிவிக்கப்படும் என்று கூறினார். இதனால் வருகிற 7-ந்தேதி 200 தொகுதிகளுக்குப் பதில் 199 தொகுதிகளில்தான் தேர்தல் நடைபெறும்.






