ரயில் மோதி கர்ப்பிணி பெண் பலி…!

கோவை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற கர்ப்பிணி பெண், ரயில் மோதி இறந்த நிலையில் அங்கு சுரங்கபாதை அமைக்கக்கோரி தண்டவாளத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவை – பொள்ளாச்சி அகல ரயில் பாதையில் தினமும் மூன்று ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்கள் சராசரியாக மூன்று மணி நேர இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் நிலையில், ரயில் பாதையில் ஆங்காங்கே ரயில் கடவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை செட்டிபாளையம் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் 500க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. அந்தப்பகுதியில் இருந்து சாலைக்கோ அல்லது பேருந்துக்காகவோ வரும் பொதுமக்கள், ரயில் தண்டவாளத்தை கடந்தே வரக்கூடிய நிலை உள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத சூழலில் இன்று காலை தண்டவாளத்தை கடந்த அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய கர்ப்பிணி மனைவி கவுசல்யா, அந்த வழியே சென்ற பொள்ளாச்சி பயணிகள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்தப்பகுதியில் ஆத்திரத்துடன் திரண்ட பொதுமக்கள், ரயில் பாதையை கடக்க சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் எனவும் இல்லாத பட்சத்தில் நடைமேடை அமைத்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தி தண்டவாளத்தின் நடுவே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தப்பகுதியில் அடிக்கடி இதுபோன்று விபத்துகள் நடப்பதாகவும், இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இறந்த பெண் உடலை ரயில்வே போலீசார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி இறந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.