கஜா புயலின் கோர தாண்டவம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகளை கட்டித்தரும் பிரபல தமிழ் நடிகர்!

தமிழகத்தில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு வீடுகள் கட்டித்தர உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

கஜா புயலின் கோர தாக்குதலால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர். தமிழக அரசு, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தர உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘கஜா புயல் பாதித்த மாவட்ட மக்கள் படும் வேதனையையும், துயரத்தையும் பார்க்கும்போது வேதனை அடைந்தேன்.

எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும், அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். புயலால் ஒரு வீடு முற்றிலும் இடிந்து நிர்கதியாய் நிற்கும் குடும்பம் ஒன்றை பார்த்தேன்.

அந்தக் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுக்க உள்ளேன். அந்த வீட்டை மட்டுமல்ல, இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப்பட்ட 50 வீடுகளை கட்டித்தர உள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.