தமிழகத்தை உலுக்கி எடுத்த கஜா புயல் நேற்று முன்தினம் ஆடிய கோராதாண்டவத்தால் இதுவரையில் நாற்பத்து ஐந்து உயிர்களுக்கும் மேல் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், இன்னும் அதிகாரபூர்வ இறப்பு விவரம் முழமையாக வெளியாகிவில்லை.
கஜா புயலின் கோரத்தில் சிக்கி நாகை மாவட்டம் முழுமையாக மீண்டு வரமுடியாமல் திணறி தவிக்கும் வேளையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
நாளையிலிருந்து இன்னும் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை பொழியும் என்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார் .
இது குறித்து அவர் கூறுகையில், தெற்கு அந்தமான் பகுதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.
இது நாளை மற்றும் நாளை மறுநாளில் மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால் நாளை முதல் 20 ஆம் தேதி வரையிலான 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடனேயே காணப்படும். 19 ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதியில் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் சிவகங்கையில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கொடைக்கானலில் 14 செ.மீ. மழை பெய்திருக்கிறது. சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்த வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளையும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 19 ஆம் தேதியும், 20ஆம் தேதியும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்.
வங்கக்கடல் பகுதிகளை பொறுத்தவரையில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்றும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளையும் , நாளை மறுதினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.








