அதிமுகவில் அணிகள் பிளவிற்கு பிறகு இரட்டை இலை சின்னம் பெற தினகரன் லஞ்சம் தர முயன்ற வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிஐ தாக்கல் செய்த குற்றபத்திரிக்கை மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் சிறையில் உள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஆண்டு பிபரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அப்போது இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழங்கியதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் டி.டி.வி.தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு சிறையில் இருந்து வெளியே உள்ளார்கள்.
முன்னதாக இந்த வழக்கை நீதிபதி அரவிந்த்குமார் அமர்வு விசாரித்தது பின்னர் அரவிந்த்குமார் அமர்விலிருந்து டெல்லி சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்தநிலையில் சுகேஷ் என்பவர் மூலம் டி.டி.வி. தினகரன் லஞ்சம் தர முயன்றதற்கு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு குறித்தான முக்கிய உத்தரவை இன்று பிற்பகல் 3 மணிக்கு வழங்க உள்ளதாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்து இருந்த நிலையில், சற்றுமுன், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல், சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் டிசம்பர் 4ம் தேதி டிடிவி தினகரன் ஆஜராக வேண்டும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.






