கேப்டன் கோலி, தோனி சாதனையை வீழ்த்திய இந்திய மகளிர் அணி வீரர்!

மகளிர் அணிகளுக்கான டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மான்ப்ரித் கவுர் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

பின்னர் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதில் மிதாலி ராஜ் 56 ரன்கள் அடித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணி மூன்றாவது போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் மிதாலி ராஜ் மீண்டும் அரை சதம் அடித்து போட்டியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றதால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் அரை சதம் அடித்த மிதாலி ராஜ் டி20 கிரிக்கெட் போட்டியில் 2283 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் டி20 போட்டியில் மிதாலி ராஜ் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்திய அணியின் வீரர்களான தோனி, விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா ஆகியோரை ரன்கள் அடிப்படையில் முந்தியுள்ளார்.

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 2207 ரன்கள் எடுத்து முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் அதனை, மிதாலி ராஜ் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இதனால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.