பலனளிக்காமல் போனதால் முயற்சியை கைவிட்ட விமானி.!

திருச்சியில் இன்று அதிகாலை முதல் கஜா புயல் காரணமாக பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த பலத்த மழையின் காரணமாக திருச்சி விமானநிலையத்தில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 2-30மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், திருச்சியில் தரையிறங்க முடியாமல் கொச்சினுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதே போல் திருச்சிக்கு காலை 6.25 மணிக்கு சென்னையில் இருந்து தனியார் விமானம் வரும். அந்த விமானம் இன்று காலை தாமதமாக 7.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை நெருங்கியது. அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததால் தரையிறங்க முடியாமல் அந்த விமானம் வானில் 3 முறை வட்டமடித்தது. பின்னர் மீண்டும் விமானத்தை தரையிறங்குவதற்காக முயற்சி எடுக்கப்பட்டது.

ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், விமானத்தை தரையிறக்க முடியாது என கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் அந்த விமானம் சென்னைக்கே திருப்பி அனுப்பப்பட்டது.