சதித்திட்டம் தீட்டிய தினகரன்! ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி? முதல்வர் பழனிச்சாமி பகீர் பேட்டி!

அதிமுகவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியவர் தினகரன் தான் என்றும், பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது , அது மதவாதக் கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா?எனவும் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று மாலை கோவை விமான நிலையத்தில் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

மேலும் அவர் அளித்த அந்த பேட்டியில் தெரிவைத்ததாவது, ”மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உழைப்பால் அந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக்கப்பட்டார்கள், ஆனால் அவர்கள் இந்த ஆட்சிக்கும், அதிமுக கட்சிக்கும் துரோகம் செய்தார்கள். அவர்களுக்கு உண்டான தக்க தண்டனையை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது”

காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றது. அதிமுகவை இரண்டாக உடைக்க சதித்திட்டம் தீட்டியவர் தினகரன் தான். அதிமுகவிற்கு முதல் துரோகி தினகரன் தான் இது நாட்டுமக்களுக்கும் தெரியும், கழகத்தில் உள்ள தொண்டர்களுக்கும் தெரியும்” என்று தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின்- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், ”பாலாறு தடுப்பணை பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் போது இது குறித்து ஏதேனும் பேசினாரா?., திமுக-பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது, அது மதவாதக் கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா?., தலைமை செயலக வழக்கில் திமுக தடை ஆணை கேட்பது ஏன்? மடியில் கனம் இல்லை என்றால் தைரியமாக வழக்கை எதிர்கொள்ள வேண்டியது தானே?” என்று ஸ்டாலினுக்கு சரமாரியாக தமிழக முதல்வர் கேள்வி எழுப்பினார்.