பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரிற்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது அதன் அமர்வுகள் நிறுத்தப்பட்டவேளை காணப்பட்ட நிலையையே தொடரப்போவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தற்போதைய பிரதமருக்கு பிரதமருக்கான ஆசனத்தை வழங்கப்போவதில்லை மேலும் தற்போதைய அரசாங்க உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வார்கள் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் சமீபத்தில் இடம்பெற்ற மாற்றங்கள் சட்டவிரோதமானவை, பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு கடிதத்தினை வழங்கியதை தொடர்ந்தே இந்த முடிவை எடுத்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் புதிதாக நியமனம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது.116 உறுப்பினர்களின் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்காது அரசியலமைப்புக்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளதாகவும் இனிமேல் தன்னால் மெளனம் காக்க முடியாது எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நீதியையும் நியாயத்தை உலகுக்கு எடுத்து கூறவேண்டி பொறுப்பு தன்னிடம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஜனாதிபதியின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு அனுப்பிய கடிதம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் கரிசனைகள் நியாயமானவை என நான் கருதுகின்றேன்இ இதன் காரணமாக கட்சியொன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மாற்றங்களை மேற்கொள்ள மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
நாடு என்றும் இல்லாத ஒரு நெருக்கடியான சூழலை சந்தித்துள்ளது. சபாநாயகர் என்ற வகையில் நாடு எதிர்கொண்டுள்ள இந்த நிலைமையில் மொளனித்து இருக்க முடியாது.
எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் இதுவரை காலமும் பாதுகாத்து வந்த நாட்டின் ஜனாநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை கண்டித்து அதற் கு எதிராக செயற்பட வேண்டியது என்னு டைய தேசிய கடமையாக கருதுகின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவம் படுதம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 116 பேர் கையொப்பமிட்டு ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளதுடன், பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டி நடவடிக்கை எடுக்குமாறு நியாயமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நவம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியை சந்தித்த போது, பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டி தீர்வு காண்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவ்வாறு இடம்பெறவில்லை. மாறாக மறுநாள் முற்பகல் 10.30 மணியளவில் தொலைபேசி ஊடாக அழைத்து, நாளை 7ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதாக உறுதியளித்திருந்தார்.
அன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்த ஜப்பான் பிரான்ஸ் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த தூதுவர்களிடம் நவம்பர் மாதம் 5ஆம் திகதி உறுதியளித்திருந்தார்.
அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷவும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.இவ்வாறான நெருக்கடியான நிலைமையில் ஜனாதிபதி வாய்மூலமான உறுதி மொழிக்கு அமைவாக நாளை 7ஆம் திகதி பாரளுமன்றத்தை கூட்டி அரசியல் நெருக்கடி காண்பதே சபாநாயகர் என்ற வகையில் எனது கடமையாகும்.
ஜனாதிபதி இதற்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். நாட்டில் ஜனநாயக மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. அரச ஊடகங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் நிர்வாக கட்டமைப்பு பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது.மறுபுறம் மக்கள் பிரதிநிதிகளுக்கு வரப்பிரசாதங்கள் வழங்கி தன் பக்க ஆதரவை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை குறித்த வெளியான தகவல்கள் தொடர்பில் கருத்தில் கொள்ளாது வேடிக்கை பார்ப்பது சபாநாயகர் என்ற வகையில் முறையானது அல்ல.
பாராளுமன்ற அமர்வை சட்டமூலமாக நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை தடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக பெரும்பான்மை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ள இந்த தருணத்தில், நீதியையும் நியாயத்தையும் உலகுக்கு வெளிப்படுத்துவது எனது கடப்பாடாகும்.
இதனடிப்படையில் பாரளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணானது என்பதோடு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்பதை பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாடாகும். எனவே மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னரான நிலைமையே ஸ்த்திரமானது என பெரும்பான்மையான உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், புதிய தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முன்னதான நிலைமையே கருத்தில் கொள்ளப்படும்.






