சிறிலங்காவில் புதிதாகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு கிடைக்காத நிலையில், ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் கலாநிதி தயான் ஜெயதிலக, நேற்று மொஸ்கோவில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து எடுத்துக் கூறியுள்ளார்.
தெற்காசிய மற்றும் ஈரான் விவகாரங்களைக் கவனிக்கும், ரஷ்ய வெளிவிவகார அமைச்சின், இரண்டாவது ஆசிய டிவிசனின், அதிகாரிகளுக்கே அவர் சிறிலங்கா நிலவரங்களை விளக்கியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் வழிகாட்டலுக்கு அமையவே, கொழும்பில் இருந்து பரிமாறப்பட்ட தகவல்களை அவர் ரஷ்ய அதிகாரிகளிடம் கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சரத் அமுனுகமவின் வாழ்த்துக்களை அவர் ரஷ்ய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதுடன், அவரது பின்புலம் குறித்தும் ரஷ்ய அதிகாரிகளுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்.
சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு சீனா மாத்திரமே இதுவரை வாழ்த்துக் கூறியுள்ளது. ஏனைய நாடுகள் அவரை இன்னமும் அங்கீகரிக்காத நிலையில், மகிந்த ராஜபக்ச தனது நெடுநாள் கூட்டாளிகளில் ஒன்றான ரஷ்யாவுக்கு தூது அனுப்பியுள்ளார்.
கலாநிதி தயான் ஜெயதிலக மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராக இருந்தவர் என்பதுடன், அண்மையில் சிறிலங்கா அதிபரால் ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.