அரசுப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற டிரைவர்…..! டார்ச்சர் தாங்க முடியலைங்க….!
திண்டுக்கல் கிளையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழக, டிரைவர் கம் கண்டக்டராகப் பணி புரிகிறார் ராம்குமார். தற்போது, திண்டுக்கல் டூ சென்னை வழித் தடத்தில் வேலை பார்த்து வருகிறார்.
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, கடந்த ஒரு வாரமாக, ஓய்வின்றி, திண்டுக்கல்லுக்கும் சென்னைக்கும், தொடர்ந்து, பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தார். இதனால், அவர் மிகவும் சோர்ந்து காணப்பட்டார்.
அதனால், உடல் சோர்வாக இருக்கிறது. ஓய்வெடுக்க வேண்டும், பணிக்கு வர இயலாது, என்று கூறியுள்ளார். அதற்கு அதிகாரிகள், வேலைக்கு வராவிட்டால், நிர்ணயித்த டீசல் இலக்கை எட்டவில்லை, என்று கூறி பயிற்சிக்காக அனுப்பி விடுவோம். கண்டிப்பாக டூட்டிக்கு வர வேண்டும், என்று நிர்ப்பந்தம் செய்துள்ளனர்.
இதனால், மனம் வேதனை அடைந்த ராம்குமார், திண்டுக்கல் கிளை, போக்குவரத்துக் கழக பணி மனை ஓய்வு அறையில், பூச்சி மருந்தைக் குடித்து, மயங்கிக் கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள், உடனடியாக அவரை, அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களிடையே தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் கூறுகையில், ஏற்கனவே, ஒரு டிரைவரை தேவையில்லாமல், சஸ்பெண்ட் செய்தனர். இப்போது, இப்படி தொடர்ச்சியாக ஓய்வின்றி வேலை பார்க்க டார்ச்சர் கொடுக்கின்றனர். தாங்க முடியலீங்க, என்று சக ஊழியர்கள் புலம்பினார்கள்.






