வில்லா புயலில் சிக்கி சிதைந்த மெக்சிகோ.!

பசிபிக் கடலில் நிலைகொண்ட வில்லா புயல், மேலும் வலுப்பெற்று மெக்சிகோவை நோக்கி நகர்ந்தது. நேற்று அதி பயங்கர புயலாக மாறி மெக்சிகோவின் மேற்கு பகுதியை தாக்கியது. சினலோவா மாநிலம் ஐஸ்லா டெல் போஸ்க் என்ற இடத்தில் புயல் கரை கடந்ததையடுத்து மணிக்கு 195 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து கனமழையும் பெய்து வருகிறது.

புயல் தாக்கியதால் மெக்சிகோவின் பசிபிக் கடற்கரை நகரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. தற்போது புயல் வலுவிழக்கத் ஆரம்பித்தாலும், தொடர்ந்து பலத்த காற்று வீசுவதுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

வில்லா புயல் வலுப்பெற்று மெக்சிகோவை தாக்கி, பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தலாம், பெரிய அளவில் மண் சரிவை ஏற்படுத்தலாம் என்று ஏற்கெனவே வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனவே, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தது. தங்கள் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவை தாக்கிய மைக்கேல் புயல், பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.