படிப்பை பாதியில் விட்ட மாணவி! தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காளிதிம்பம் என்ற கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்துவருகின்றனர். இந்த கிராமத்தில் கூலிவேலை செய்துவரும் சாமிநாதன் – மாரியம்மாள் என்ற தம்பதியினருக்கு சிவரஞ்சனி என்ற மகளும், ஹரிபிரசாந்த் என்ற மகனும் உள்ளனர்.

தாய் மாரியம்மாள் இறந்துவிட்ட நிலையில், பிள்ளைகள் இருவரையும் சாமிநாதன் கூலி வேலை செய்து படிக்க வைத்தார். நன்கு படிக்கும் சிவரஞ்சனி ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற கனவில் கோவை அரசு கலைக்கல்லூரியில் பிகாம் (B.COM) படித்து வந்துள்ளார். ஹரிபிரசாந்த் தலமலை அரசு உண்டு உறைவிட பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், சாமிநாதனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டவே, மகள் சிவரஞ்சனி தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தனது தம்பியின் படிப்புக்காகவும், குடும்ப செலவிற்காகவும் சிவரஞ்சனி தன் படிப்பை நிறுத்தி விட்டு தற்போது 100 நாள் வேலைக்குச் செல்கிறார்.

வறுமையின் காரணமாக கல்லூரி படிப்பை நிறுத்திய சிவரஞ்சனி, தனது கல்விக்காகவும், குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும் அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனை நமது செய்திபுனல் முதல் அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றது.

இந்நிலையில், இந்த முயற்சியின் காரணமாக அந்த மாணவியின் கனவை நிறைவேற்ற தமிழக அரசு முன் வந்துள்ளது. இது சம்ம்மந்தமாக தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், ”மாணவியின் பேட்டியை ஊடகங்களில் பார்த்ததாகவும், தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும்” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், ”மாணவி சிவரஞ்சினியின் விருப்பத்துக்கு ஏற்ப அவரது கல்லூரிப் படிப்பு தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவரது சகோதரரின் படிப்பு மற்றும் இதர செலவுகளையும் தமிழக அரசே ஏற்கவுள்ளது” என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமான செய்தியை படித்து பகிர்ந்தவர்களுக்கும், மற்ற ஊடகங்களுக்கும், ஒரு மாணவியின் கனவை நிறைவேற்றிய பெருமை சேரும். சினிமா செய்திகளுக்கு கொடுக்கும் ஆதரவை மக்கள் குறைக்கும் பட்சத்தில், தமிழகத்தில் பல நல்ல விடயங்கள் நடக்கும் என்பதில் ஐயமில்லை.