தேனி மாவட்டம் வடுகபட்டியில் விவசாய குடும்பத்தில் பிறந்த கவிஞர் வைரமுத்து தமிழ்மொழியின் மீது அளவற்றப் பற்றுக் கொண்டவர்.
தன்னுடைய இளமைப் பருவத்தில் அண்ணாவின் இனிமையான தமிழ் நடையாலும், பெரியாரின் சிந்தனைகளாலும், கருணாநிதியின் இலக்கியத் தமிழாலும் கவரப்பட்டு, பாரதியார், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசன் அவர்களின் கவிதை நடையால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால், மேலும் தனது கிராமத்தின் சுற்றுப்புறச்சூழலும் அவரைத் தனது பன்னிரெண்டாவது வயதிலேயே கவிதை எழுத ஊக்குவித்தது.
திருவள்ளுவரின் திருக்குறளால் கவரப்பட்ட அவர், தனது பதினான்காவது வயதிலேயே, தமிழ் செய்யுளின் யாப்பின் சொல் இலக்கண விதிகளைக் கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
1978 ஆம் ஆண்டு பாரதிராஜா அவர்களின் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்ற பாடலே அவர் திரையுலகில் இயற்றிய முதல் பாடலாகும்.
திரைப்படங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், பல்வேறு நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், நூல்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
அவரது படைப்புகளில் முக்கியமான நாவல்கள் இதோ, வில்லோடு வா நிலவே, தண்ணீர் தேசம் , வானம் தொட்டுவிடும், தூரம்தான் , கருவாச்சி காவியம் , கள்ளிக்காட்டு இதிகாசம் , மற்றும் மூன்றாம் உலகப் போர்.
தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழும் அவர், சிறந்த பாடலாசிரியருக்காக ஏழு முறை தேசிய விருதும், கலைமாமணி விருதும் , பத்மஸ்ரீ விருதும் பெற்ற இந்திய தமிழ்க் கவிஞர்.
கவியரசு என்றும், கவிப்பேரரசு என்றும், காப்பியப்பேரறிஞர் , காப்பியசாம்ராட் என்றும் பட்டங்கள் பெற்றுள்ளார்.
முன்பு இளையராஜாவுடனும், தற்போது ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.






