மூங்கில் துறைப்பட்டு அருகே திருமணம் செய்து வைக்காததால் மகனே தந்தையை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மூங்கில் துறைப்பட்டு கொடியனூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் கந்தன் (வயது 65) பொடி (60) தம்பதிகள். இவர்களுக்கு 5 மகன்கள் உள்ள நிலையில் 2 மகன்களுக்கு திருமணமாகிவிட்டது. 3-வது மகன் கோபி (35) இவருக்கு திருமணம் ஆகவில்லை. வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். சொந்த ஊருக்கு திரும்பிய கோபி தனது தாய், தந்தையிடம் தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். அவர்கள் விரைவில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என கூறியுள்ளனர்.
ஆனால் வெகுநாட்களாகியும் கோபிக்கு திருமணம் செய்து வைக்காததால், கோபிக்கும் அவரது பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு கோபி நான் வெளி நாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை என்ன செய்தீர்கள், எனக்கு உடனடியாக திருமணம் செய்து வையுங்கள் என அவரது தந்தை கந்தனிடம் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கோபி தனது தந்தை கந்தனின் தலையை பிடித்து சுவற்றில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த கந்தன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட கந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கோபியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி கொண்டு வருகின்றனர்.






