ஜெயலலிதா மரணம்! புயலை கிளப்பும் முன்னாள் அமைச்சர்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீது தான் எனக்கு சந்தேகம் இருக்கிறது என்று அமமுக முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த செந்தில்பாலாஜி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவருடைய தொகுதியான அரவக்குறிச்சி தொகுதிக்காக சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரவக்குறிச்சியில் அமமுக சார்பில் பல இடங்களில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று அரவக்குறிச்சியில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியபோது, ‘‘அதிமுகவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 முதல் 15 பேர் எங்கள் பக்கம் வருவதற்கு தூது விட்டுக்கொண்டுள்ளனர் என்றார்.

மேலும் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை ஒரு பகுதிநேர அரசியல்வாதி என்றும் அவர் ஒரு அரசியல் வியாபாரி எனவும் கடுமையாக சாடினார். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தம்பிதுரை மீது தான் எனக்கு சந்தேகம் உள்ளது எனவும் கூறினார்.

முதல்வருக்கு இணையான பொறுப்பில் உள்ள அவர், ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் 75 நாட்களும் முதல்வர் கனவில் மருத்துவமனையில் காத்துக் கிடந்தவர்தான் தம்பிதுரை’’ என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.