சிறுமி கொலையில் ஹொட்டல் உரிமையாளர் கைது…

காலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாழை மரமொன்றில் கடந்த 2ம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் தொடர்பான மரண பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சிறுமியின் சடலத்தின் உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க ஆய்வாளருக்கு அனுப்பி அதன் அறிக்கை கிடைத்த பிறகு மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர் அஜித் ரத்னவீர தெரிவித்துள்ளார்.

கடந்த 2ம் திகதி கொடகவெல பல்லேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான ஹிருணி சுனேத்ரா விஜேசிங்க என்ற சிறுமி தாழை மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காலி நீதவான் நீதிமன்ற நீதிபதி மரண பரிசோதனைகளுக்காக சடலத்தை கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஓகஸ்ட் மாதம் குறித்த சிறுமியை பஸ் நடத்துனர் ஒருவர் ஹொட்டலுக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்ததாகவும் அந்த சம்பவம் தொடர்பாக குறித்த நபரை கைது செய்வதற்கு முடியாமல் இருப்பதால் ஹொட்டல் உரிமையாளர் கொடகவெல பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதுதொடர்பான வழக்கு இரத்தினபுரி நீதிமன்றில் நடைபெறுவதாகவும் குறித்த சிறுமியை நன்னடத்தை இல்லத்தில் தங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.