மின்சாரம் துண்டிக்கப்பட்டது.. தமிழகத்தில் ரெட் அலர்ட் அறிகுறியை எதிர்கொள்ளும் முதல் மாவட்டம்!

குமரி மாவட்டம் முழுவதும் அனேக இடங்களில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. முதலில் சிறு தூரலாக தொடங்கிய மழை போக, போக பெருமழையாக பெய்யத்தொடங்கியது.

குறிப்பாக, நாகர்கோவில், வடசேரி, பார்வதிபுரம் , திட்டுவிளை, அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, கோட்டார், கொட்டாரம், மயிலாடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மேகங்கள் திரண்டு பரவலாக மழைகொட்டியது.

நேரம், செல்ல, செல்ல இடி, மின்னலுடன் மழை பெய்தது. குமரியில் பெய்த இந்த கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் கால் மூட்டு அளவிற்கு தண்ணீர் தேங்கியது.

இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும்,மழை காரணமாக மாவட்டம்முழுவதும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில், மாவட்டஆட்சியர் பிரசாந்த் வடநேரே வெளியிட்ட அறிவிப்பில்,

தென்கிழக்கு அரபிக்கடலில் வெள்ளிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்றும் அதுபுயலாக மாறி வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும். அல்லது அருகில் உள்ள தங்கு தளங்களில் பாதுகாப்பாக கரை ஒதுங்க வேண்டும். மேலும், மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.

மேலும், அவசர உதவிக்கு 1097 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.