தினகரனை கண்டு பயப்படும் ஆளும் கட்சி.! மறுபடியும் முதலில் இருந்தா?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருதாச்சலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 4 பேருக்கு சபாநாயகர் நோட்டிஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதற்கான காரணம் பற்றி தங்க தமிழ்ச்செல்வன் கூறியபோது டி.டி.வி.தினகரனுக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருவது ஆளும் கட்சியினருக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருந்தார்.

அதன்பிறகும் கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் இருப்பது இவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தினகரனை விட்டு 4 பேரும் பிரியமாட்டார்கள் என்பதால் இவர்களை பயமுறுத்தி எடப்பாடி பழனிசாமி பக்கம் இழுப்பதற்காகவே நோட்டீஸ் அனுப்ப போவதாக மிரட்டுகிறார். தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் இரு பக்கமும் ‘பேலன்ஸ்’ செய்வதால் அவர்களை கொறடா கண்டு கொள்ளவில்லை.

இந்த 4 எம்.எல்.ஏ.க்களும் அப்படி என்ன தவறு செய்தார்கள் என்பது தெரியவில்லை. இந்த விசயத்தில் சர்வாதிகாரமாக எடுக்கும் முடிவுகள் சபாநாயகருக்கு கெட்ட பெயரைதான் உண்டாக்கும்.

ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்னும் தீர்ப்பு கிடைக்காததால் விடை தெரியாமல் தவிக்கிறோம். இப்போது இந்த வரிசையில் மேலும் 4 எம்.எல்.ஏ.க்களா? என்று நினைக்கிறபோது சினிமாவில் வரும் வசனம் போல் மறுபடியும் முதலில் இருந்தா? என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.