இறுதிவரை இந்திய அணியை நடுங்க வைத்த வங்கதேச அணி!. இறுதியில் அதிர்ஷ்டம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையே நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

வங்கதேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோன் தாஸ் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்தனர். முதல் 20 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது வங்கதேச அணி.

இவர்களை எப்படி சமாளிப்பது என்று தடுமாறிய இந்திய அணிக்கு 21 ஆவது ஓவரை வீசிய கேதர் ஜாதவ் ஆறுதல் அளித்தார். அவர் வீசிய அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் மெஹ்தி ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வீரர்களில் சவுமியா சர்காரை(33) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

மெஹ்முதுல்லா(4), லிட்டோன் தாஸ் 121 ஓட்டங்களிலும் வெளியேறினார்கள். சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ஓட்டங்கள் அடிக்க வங்கதேச அணி 48.3 ஓவரில் 223 ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளையும் கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் தவான் நல்ல துவக்கத்தை அளித்தனர். ஆனால் தவான் 5 ஆவது ஓவரில் 15 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரைத்தொடர்ந்து ராயடுவும் 2 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய ரோகித் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து 48 ரன்களில் 17 ஆவது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 83. அதன் பிறகு ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் தோனி மிதமான ஆட்டடத்தை வெளிப்படுத்தினர். இருவரும் 60 பந்துகளுக்கு மேல் சந்தித்து 37 மற்றும் 36 ரன்கள் முறையே எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவுக்கு ஆரம்பத்திலேயே தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ரிட்டயர்ட் முறையில் பாதி ஆட்டத்திலேயே வெளியேறிவிட்டார். இதனால், 169 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுக்களை இழந்ததால் இந்திய அணியின் ரன் ரேட் விகிதம் குறைந்து. ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி முனைப்பில் இருந்தது.

டைசி ஓவரில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஜாதவ் மற்றும் குல்தீப் களத்தில் இருந்தனர். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் இந்த ஆட்டமும் டிராவில் முடிந்து விடுமோ என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக மக்மதுல்லா வீசிய கடைசி பந்து, ஜாதவ் காலில் பட்டு செல்ல ஒரு ஓட்டம் எடுத்து இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை சதம் அடித்து அசத்திய லிட்டன் தாஸ் பெற்றார். தொடர் நாயகனாக இந்தியாவின் ஷிகர் தவான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.