ஓ.பி.எஸ் உள்ளிட்டோருக்கு மீண்டும் சிக்கல்! பரபரப்பாகும் டெல்லி!

ஓ.பி.எஸ் , கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தங்கத்தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

முதல்வருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வழக்கில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட 11 பேரை தகுதிநீக்கம் செய்ய கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் தங்கத்தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோரும் வழக்கு தொடர்ந்து இருந்தார்கள்.

கொறடாவின் உத்தரவை மீறியதாக அளிக்கப்பட்ட புகார் மீது சபாநாயகர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், 11 பேரை தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் சபாநாயகர் முடிவு எடுக்காத நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட முடியுமா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளது. இதனால் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து அப்போது உத்தரவிட்டது.

இதனால் போடி தொகுதி உறுப்பினர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் , ஆவடி தொகுதி உறுப்பினர் அமைச்சர் பாண்டியராஜன், எம் எல் ஏ க்கள் மேட்டூர் செம்மலை, மைலாப்பூர் நடராஜ், கோவை கவுண்டம்பாளையம் ஆறுகுட்டி, திருவைகுண்டம் உறுப்பினர் சண்முகநாதன், சோழவந்தான் மாணிக்கம், வாசுதேவநல்லூர் மனோகரன், மேட்டுபாளையம் சின்னராஜ், மதுரை தெற்கு உறுப்பினர் சரவணன், ஊத்தங்கரை உறுப்பினர் மனோரஞ்சிதம் உள்ளிட்டோரின் பதவி நீடிக்கும் என அறிவிக்கபட்டது.

இந்நிலையில் இந்த தீர்ப்பினை எதிர்த்து உடனடியாக திமுக மேல்முறையீடு செய்தார்கள். அதேபோல தினகரன் தரப்பிலும் மேல்முறையீடு செய்தனர். திமுக தரப்பில் மேல்முறையீடு செய்ய உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதேபோல தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்குக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து இரண்டு தரப்பினரும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.