கடவுளுக்கே தினக்கூலியா? அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்!

கல்விக் கண் திறக்கும் கடவுளர்களாக போற்றப்பட வேண்டிய ஆசிரியர்களை பணி நிலைப்புக்காகவும், பிற உரிமைகளுக்காகவும் கையேந்தி நிற்க வைக்கும் அவலம் தமிழகத்தில் மட்டும் தான் அரங்கேறுகிறது. பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் பல ஆண்டுகளாக நிறைவேற்ற மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 46 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் காலியான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் பகுதி நேர ஆசிரியர்களைக் கொண்டு தான் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 46 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் சேர்த்து 1700-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றன. இவர்களுக்கு பாடவேளைக்கு ரூ.300, செயல்முறை பாடவேளைக்கு ரூ.150 என்ற விகிதத்தில் மாதத்திற்கு ரூ.15,000க்கு மிகாமல் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் ஆண்டுக்கு 7 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும். மீதமுள்ள காலங்களில் தேர்வுப் பணி, விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு சென்றால் மட்டும் அவர்களுக்கு ஓரளவு ஊதியம் கிடைக்கும். இல்லாவிட்டால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு எந்த ஊதியமும் கிடைக்காது.

பல மாதங்களில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான பாடவேளைகள் மட்டுமே ஒதுக்கப்படும்; சில நேரங்களில் முழு நேர ஆசிரியர்களுக்கு மாற்றாக பாடம் நடத்த பணிக்கும் போது, அந்த பாடவேளைகள் கணக்கில் சேர்க்கப்படாது. இதனால் மாதத்திற்கு ரூ.10,000 கூட ஊதியம் கிடைக்காத நிலை நிலவுகிறது. இன்னும் சில மாதங்களில் மிக அதிக பாடவேளைகள் பாடம் நடத்தினாலும் கூட, ஊதிய உச்சவரம்பாக ரூ.15,000 நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், அத்தொகை மட்டுமே ஊதியமாக கிடைக்கும். இந்நிலையை மாற்றி ஒவ்வொரு மாதமும் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் கிடைக்கும் வகையில், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் போதிலும், அதை ஏற்க ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர்.

தமிழக அரசின் கலை-அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் இதே விகிதத்தில் தான் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே கவுரவ விரிவுரையாளர்களுக்கு தொகுப்பூதிய முறை அறிமுகம் செய்யப்பட்டு, மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு ஊதிய உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு வரை ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டிலிருந்து ஜூன் முதல் ஏப்ரல் வரை மொத்தம் 11 மாதங்கள் ஊதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். ஆனால், இவை எதுவும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளும் ஒரே அமைச்சகத்தின் கீழ் தான் செயல்பட்டு வருகின்றன. இரு வகை கல்லூரி ஆசிரியர்களுக்கான தகுதி, பணியின் தன்மை ஆகிய இரண்டும் ஒன்று தான் எனும் போது, ஒரு பிரிவினருக்கும் ஒரு வகையான ஊதியமும், இன்னொரு பிரிவினருக்கு வேறு வகையான ஊதியமும் வழங்குவது பெரும் அநீதியாகும்.

பொறியியல் மற்றும் கலை அறிவியலில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்த பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் முழுவதும் பணி செய்து கிடைக்கும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலான ஊதியத்தை வைத்துக் கொண்டு எவ்வாறு குடும்பம் நடத்த முடியும். இவர்களில் பலர் மாதாந்த அதிகபட்ச ஊதியம் ரூ.4000 வழங்கப்பட்ட காலத்திலிருந்து பணியாற்றி வருபவர்கள் ஆவர். வாழ்க்கையின் பெரும்பகுதியை பகுதி நேர ஆசிரியர்களாகவே கழித்து விட்ட இவர்களால் இனி வேறு பணிகளுக்கு செல்வதும் சாத்தியமற்றது.

எனவே, பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும். உடனடியாக அது சத்தியமில்லை என்றால் பாடவேளை அடிப்படையில் ஊதியம் வழங்கும் முறையை மாற்றி தொகுப்பூதியமாக மாதம் ரூ.30,000 வழங்க அரசு முன்வர வேண்டும் எனவும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.