பல் தேய்க்கும்போது ஈறுகளில் ரத்தம் வடிகிறதா?

ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வரும்.

எனவே தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். இத்தகைய பல் ஈறுகளில் இருந்து இரத்தம் வருவதை தடுக்கும் எளிய வழிகளைப் பற்றி பார்ப்போம்.

பல் ஈறுகளில் இரத்தம் வடிவதற்கு காரணங்கள்
  • உடலில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே குறைபாடு இருந்தாலும் பல் ஈறுகளில் இரத்தம் வடியலாம்.
  • ஈறுகளில் உண்டாகும் தொற்று பாதிப்பு காரணமாகவும் ஈறுகளில் இரத்தம் வடியலாம்.
  • கர்ப்ப காலத்தில் உண்டாகும் ஹார்மோன் மாற்றத்தாலும் ஈறுகளில் இரத்தம் வடியலாம்.
  • மோசமான வாய்வழி சுகாதாரம் என்பது பல் மற்றும் ஈறு தொடர்பான தொல்லைகளுக்கு அடிப்படை காரணமாகலாம்.
  • அதிக அளவு புகையிலை பயன்பாடு, ஈறுகளுக்கு தீங்கை உண்டாக்கலாம்.மோசமான உணவுப் பழக்கம் கூட ஈறுகளின் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம்.
  • ஆரோக்கியமற்ற வாய்வழி சுகாதாரம் கிருமிகளை வாயில் உற்பத்தி செய்யும். மேலும் ஈறுகளில் படியும் அழுக்கு மற்றும் கிருமிகள் பல் வீக்கத்தை உண்டாக்கி இதனால் பல் ஈறுகளில் அழற்சி மற்றும் இரத்தம் வடியலாம்.
பல் ஈறுகளில் இரத்தம் வடிவதை தடுக்கும் முறைகள்
உப்பு நீரில் வாய் கொப்பளித்தல்
  • உப்பு ஈறுகளில் இரத்தம் வடிவதற்கு காரணமான தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் மற்று சிறிதளவு உப்பு. இரண்டையும் ஒன்றாகக் கலந்து, வாயில் ஊற்றி கொப்பளிக்கவும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்தால் இரத்த கசிவு நிற்கும்.
தேன்
  • தேன், கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட ஒரு பொருள் என்பதால், ஈறுகளில் இரத்தம் வடிவதற்கு காரணமான கிருமிகளை அழிக்க உதவுகிறது. எனவே சிறிதளவு தேனை எடுத்து பல் ஈறுகளின் மேல் மென்மையாக மசாஜ் செய்யவும்.
குருதிநெல்லி சாறு
  • குருதிநெல்லியில் பினோலிக் அமிலம் மற்றும் அந்தோசயனின் போன்ற கூறுகள் இருப்பதால் இதற்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. இதனால் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகள் கிருமிகளின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். எனவே இனிப்பு சேர்க்கபடாத குருதிநெல்லி சாறு எடுத்து தினமும் குடிப்பதை வழக்கமாக கொள்ளலாம்.
ஆயில் புல்லிங்
  • தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. மேலும் இதனால் பற்களில் இரத்தம் வடிவதற்கு காரணமாக இருக்கும் தொற்று மற்றும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன
மஞ்சள்
  • மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் கூறு, அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டது. இது பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை தடுக்க உதவுகிறது. மேலும் கடுகு எண்ணெயுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கலந்து ஈறுகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்.
குறிப்பு
  • தினமும் பற்களை பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டவுடன் கட்டாயம் பல் துலக்க வேண்டும்.
  • பற்களை சுத்தம் செய்யும்போது மென்மையாக செய்ய வேண்டும். இதனால் ஈறுகளில் உள்ள மென்மையான திசுக்கள் சேதமடைவது தடுக்கப்படுகிறது.
  • யோகர்ட், க்ரீன் டீ, சோயா, பூண்டு போன்றவை உங்கள் பற்களின் உறுதியை பாதுகாக்க உதவுகிறது. இவற்றை பயன்படுத்தி உங்கள் ஈறுகளை ஆரோக்கியமானதாக வைத்திருக்கலாம். இரத்தம் வடிதலை கட்டுப்படுத்தலாம்.