`ராகுல்காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது’ – மோடி!

`நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி  கண்ணடித்ததை நாடே பார்த்தது’ என்று கூறி ராகுல்காந்தியை, பிரதமர் நரேந்திரமோடி விமர்சித்துள்ளார்.

ராகுல்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பந்தஸ்து வழங்கவில்லை, மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி தெலுங்குதேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், உள்ளிட்ட எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளித்தனர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேச கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது பேசிய ராகுல்காந்தி, மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடினார்; தொடர்ந்து மோடிக்கு அருகே சென்று அவரை கட்டிபிடித்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து இரவு 9மணி அளவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது காங்கிரஸை சாடிய அவர்,  `இது பாஜகவுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பல்ல. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான வாக்கெடுப்பு. எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பிரதமராக நினைக்கிறார் ராகுல்காந்தி. எதிர்கட்சிகள் நாட்டு மக்களை தேவையில்லாமல் குழப்புகின்றனர். 125 கோடி மக்களின் ஆசீர்வாதம் மத்திய அரசுக்கு உண்டு. எல்லோரின் வளர்ச்சிக்காகவும் அரசு பணியாற்றி வருகிறது’ என்று பேசிய அவர், `ராகுல் காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது’ என்று ராகுல் காந்தியை விமர்சித்தார்.