மஹிந்தவிடம் பணம் பெற்றுக்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி பறிபோகிறது?

போர் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களை அடிப்படையாக வைத்து சிறிலங்காவிற்கு எதிராக சர்வதேச அரங்கில் எழுந்த அழுத்தங்களை தடுப்பதற்காக மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம் இருந்து பெறுந்தொகைப் பணத்தை பெற்றுக்கொண்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பேஸ்லி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொண்டதற்காக இயன் பேஸ்லி மீது கடும் கண்டனங்களை வெளியிட்டுவரும், வட அயர்லாந்து அரசியல் கட்சிகள், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

அதேவேளை 30 நாட்களுக்கு மேல் பாராளுமன்ற அமர்வுத் தடைக்குள்ளாகும் ஒருவரை அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசனத்தைச் சேர்ந்த வாக்காளர்களில் பத்துவீதமானோர் கோரிக்கை விடுத்தாலும், பேஸ்லி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனால் வட அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இயன் பேஸ்லி பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசனத்திற்கு விரைவில் இடைத் தேர்தலொன்று வரலாம் என்றும் பீ.பீ.சீ உட்பட பிரித்தானியின் முன்னணி ஊடகங்கள் அறிவித்திருக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கத்தின் முழுமையான அணுசரணையுடன் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இயன் பேஸ்லி 2013 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் சிறிலங்காவிற்கு அதிசொகுசு விடுமுறையை கழித்திருந்ததாக 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தி டெலிகிறாப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இதனால் 30 நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாத வகையிலான தடைக்கு ஆளாகியுள்ள இயன் பேஸ்லி இன்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார்.

இதன்போது தனக்கு எதிராக பிரித்தானிய பாராளுமன்ற ஒழுக்காற்றுக் குழு விதித்துள்ள தண்டனையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த பேஸ்லி, எனினும் டெலிகிறாப் பத்திரிகை பரபரப்பூட்டும் வகையில் தனக்கு எதிரான செய்தியை பிரசுரித்திருந்ததாக குற்றம்சாட்டினார்.

தனக்கு கிடைத்த சிறப்புச் சலுகை தொடர்பில் முன்னதாகவே பாராளுமன்றத்திற்கு அறிவிக்காதது தவறு என்று ஏற்றுக்கொண்டுள்ள பேஸ்லி, அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

இதேவேளை இயன் பேஸ்லி தொடர்பான பாராளுமன்றத்தின் ஒழுக்காற்றுக் குழுவின் அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ள வட அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ் கட்சி, இந்த விவகாரம் கட்சி செயற்குழுவில் ஆராயப்பட்டு தீர்மானமொன்று எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கட்சிக் கூட்டத்தில் பேஸ்லியின் நடவடிக்கைக்கு எதிராக முடிவொன்று எடுக்கப்பட்டால் அவரது ஆசனமான வட அயர்லாந்தின் அன்டரிம் வடக்கு ஆசனத்திற்கு இடைக்கால தேர்தலொன்றை நடத்தவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் பிரித்தானிய பாராளுமன்ற ஒழுக்காற்றுக் குழுவின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு பிரித்தானிய கீழ் சபையான அவுஸ் ஒப் கொமன் அங்கிகரிக்க வேண்டும். இதற்கான பிரேரணையை பாராளுமன்ற அவைத் தலைவர் சமர்ப்பிக்க வேண்டும்.

வட அயர்லாந்தின் மற்றுமொரு பிரதான கட்சியான சின் பென்னின் போய்லி பாராளுமன்ற உறுப்பினர் எலிசா மெக்னெலியன், இயன் பேஸ்லியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனநாயக யூனியனிஸ் கட்சி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் வட அயர்லாந்தின் கடும்போக்குவாத வலதுசாரிக் கட்சியான அல்ட்ரா யூனிஸயனிஸ்ட் கட்சியின் தலைவர் ரொபின் ஸ்வானும், இயன் பேஸ்லியின் நடவடிக்கை வெட்கக் கேடானது என்று குறிப்பிட்டுள்ளார். அன்ட்ரிம் வடக்கு பிரதேச மக்கள் இயன் பேஸ்லியிடம் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை வட அயர்லாந்தின் மற்றுமொரு கட்சியான ரி.வி.யூ தலைவர் ஜிம் அலிஸ்டரும் பேஸ்லி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.