கொங்கு கிராமியத்து ஆட்டிறைச்சி குடல் குழம்பு

தேவையான பொருட்கள்

வெள்ளாட்டு குடல் செட் 1 ( பொடியாக சிறு துண்டுகளாக நறுக்கியது )
சின்ன வெங்காயம் 26 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி 3 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
பச்சை மிளகாய் 12 ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)
பட்டை 1 இன்ச்
கிராம்பு 4
சோம்பு 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 கப்
வரமிளகாய் துருவல் 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையானஅளவு
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல கொஞ்சமாக
கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி ( பொடியாக நறுக்கியது)
மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி

செய்முறை
1. மிக்ஸியில் பட்டை , கிராம்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் அனைத்தையும் சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

2. பிறகு மிக்ஸியில் பச்சை மிளகாய் , தேங்காய் துருவல் மற்றும் சோம்பு அனைத்தையும் சேர்த்துகோங்க அதனுடன் சிறிது தண்ணீர்கூட சேர்த்துகோங்க நன்றாக மையமாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

3. பிறகு மிக்ஸியில் தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

4. இப்பொழுது பிரஷர் குக்கரில் மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்துகோங்க நன்றாக வெடிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாகவதக்க வேண்டும்.

5. அதில் முதல்கட்டமாக சின்ன வெங்காய விழுதை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அதன் பிறகு இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

6. பிறகு அதில் தக்காளி அரைத்த விழுதையும் மற்றும் தேங்காய் அரைத்த விழுதையும் சேர்த்துகோங்க நன்றாக மணம் வீசு வதக்க வேண்டும்.

7. அதில் மஞ்சள்தூள் , வரமிளகாய் தூள் , தேவையான அளவிலான உப்புத்தூள், கரம்மசாலா தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்துகோங்க நன்றாக பச்சை மணம் போகும் வரை வதக்க வேண்டும்.

8. இப்பொழுது பொடியாக நறுக்கிய குடல் துண்டுகளை சுத்தமாக சுடுதண்ணீர் ஊற்றி நன்றாக கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூன்று தடவை கழுவி கொள்ள வேண்டும்.

9. இச்சமயத்துல நன்றாக கழுவிய குடல் துண்டுகளை பிரஷர் குக்கரில் போட்டு நன்றாக வதக்க வேண்டும் அதனுடன் 3 கப் தண்ணீர்சேர்த்துகோங்க , இதனுடன் தேவையான அளவு உப்பு ( தேவையெனில் சேர்த்து கொள்ளவும்) அதன் பிறகு பிரஷர் குக்கரின் மூடியை மூடி விசில் பொருத்தி மிதமான தீயில் 15 நிமிடங்கள் வைத்து விடவும். விசில் முக்கியமல்ல நேரம் தான் முக்கியம்.

10. அதன் பிறகு அடுப்பை அணைத்து விடவும் பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் பிரஷர் குக்கரின் மூடியை திறந்து பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவவும்.

11. இப்பொழுது சுடச்சுட குடல் குழம்பை ஆவி பறக்கும் இட்லி உடன் பரிமாறவும்.