உடம்பின் மூலை முடுக்குகளில் இருக்கும் கொழுப்புக்களை தேடி கரைக்கும் பழம்பாசி….

பழம்பாசி என்றவுடன் நீர்ப்பிடிப்புள்ள இடங்களில் படர்ந்து, கால்களை வழுக்கி விழவைக்கும், அடர்பச்சைநிற நீர்ப்பாசி என்று நினைத்துவிட்டீர்களா?

இது, நம்மைத் தடுக்கிவிழ வைக்கும் நீர்ப்பாசி இல்லை, அதிக உடல் எடையால் நடை தடுமாறி விழாமல் காத்து, உடல் எடையைக் குறைத்து பலநன்மைகள் செய்யும், அடர் பச்சைநிற மூலிகைச்செடி.

எங்கு கிடைக்கும்?

வயல் நிலங்களில் காணப்படும் சிறிய செடியே, பழம்பாசி. இதை நிலத்துத்தி என்றும் முன்னோர் அழைத்தார்கள். இந்தச்செடி, சிறிய இலைகளுடன் அடர் மஞ்சள் மலர்களின் மேல்புறம் முட்கள் போன்ற முடிகளுடன் காணப்படும். சிலர் காண்பதற்கு எளிமையாக இருந்தாலும், குணத்தில் நற்தன்மைகளில் உயர்ந்தவர்களாகத் திகழ்வார்கள், அதுபோல, இயற்கைப் படைப்பில் சாதாரணமாக எங்கும் கிடைக்கும் எளிய செடியாக இருந்தாலும், பழம்பாசி மனிதர்களுக்கு வழங்கும் நன்மைகள் அளவிட முடியாதது. பெண்கள் கருவுற்ற உடனேயே, ஆங்கில மருந்துவர்களை நாடி, தொடர்ந்து ஊசி மாத்திரை மூலம், வயிற்றில் குழந்தை உருவாகுமுன்னரே, அதை பக்கவிளைவுகள் கொண்ட மேலைமருத்துவத்தில், நாம் தள்ளி வளரவிடுகிறோம்.

பயன்கள்

செயற்கை வழியிலேயே குழந்தையின் வாழ்க்கையை நாமே ஆரம்பிக்க வைத்துவிட்டு, பின்னர், கண் பார்வைக் குறைபாடு, உடல் சத்துக் குறைபாடு என்று மருத்துவர்களிடம் அலையவைத்து, அவர்களை உடல் நல பாதிப்புள்ளவர்களாக்கி விடுகிறோம். இதுபோன்ற நிலையெல்லாம், முன்னர் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்பட்டதில்லை, குழந்தை வயிற்றில் இருக்கும்போதும், குழந்தை பிறந்தபின்னும் குழந்தையையும், தாயையும் நலமுடன் காக்க, கருவுற்ற பெண்களின் பிரசவம், சுகப்பிரசவமாக ஆக, மூலிகை மருந்துகள், இலேகியங்கள் கொடுத்துவருவார்கள். அப்படிக் கொடுக்கும் நடகாய இலேகியம், தசமூலாரிஷ்டம், ஜிரகரிஷ்டம் போன்ற சித்த, ஆயுர்வேத மூலிகை மருந்துகளில் முக்கிய மூலிகையாக, பழம்பாசி எனும் இந்த எளிய மூலிகையும் கலந்திருக்கிறது.

சிறப்புகள்

பழம்பாசி மூலிகையின் செடி முழுவதுமே மருத்துவப் பலன்கள் மிக்கது என்றாலும், இலைகள் மற்றும் வேர்கள் சிறந்த மருத்துவ நன்மைகள் மிக்கவை, உடல் உறுப்புகளின் உட்சூட்டைக் குறைக்கும், மஞ்சள் காமாலைக்கு மருந்தாகிறது. நரம்புத்தளர்ச்சி, வலிப்பு வியாதிகளை குணமாக்கும், இரத்த அழுத்த பாதிப்புகளை விலக்கும், இரத்த சோகைக்கு சிறந்த மருந்தாகும். ஜுரம் மற்றும் மூச்சு பாதிப்புகளை சரியாக்கும், உடல் எடையைக் குறைக்கவைக்கும். உடல் சூட்டு கட்டிகள், மூல பாதிப்புகளை குணமாக்கும் தன்மை வாய்ந்தது. பெண்களின் வெள்ளைப்படுதல் பாதிப்புக்கு சிறந்த தீர்வாகிறது.

வெள்ளைப்படுதல்

பெண்களின் வெள்ளைப்படுதல் பாதிப்பைப் போக்கும் பழம்பாசி மூலிகை. இளம்பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை பாதிக்கும் ஒன்று வெள்ளைப்படுதல். இனப்பெருக்க உறுப்புகளின் வழியே திரவம் வழியக் காரணம், பூஞ்சைத் தொற்று, கருப்பை, சிறுநீர்ப்பை பாதிப்புகளால் இருக்கலாம். பெண்களுக்கு மிகுந்த சங்கடத்தையும், துன்பத்தையும் தரும் இந்த பாதிப்பு, சிலர் அதிகமாக உட்கொள்ளும் துரித உணவுகள், நன்கு தோய்க்காத உள்ளாடைகள், உடல் சூடு, மன உளைச்சல், சரியான உறக்கமின்மை, சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, மிகையான உடலுறவு மற்றும் தீய பழக்கங்களாலும் ஏற்படலாம். பழம்பாசி இலைகளைப் பறித்து நன்கு அலசி, சீரகத்துடன் அரைத்து நீர் அல்லது மோரில் கலந்து தினமும் காலையில் காபி டீ குடிப்பதற்கு முன் குடித்துவர, வெள்ளைப் படுதல் பாதிப்பு சரியாகிவிடும்.

தாது விருத்தி

உடல் சூட்டால் சில ஆண்களுக்கு, சிறுநீர் கழிக்கும்போது அல்லது தூக்கத்தில் உயிரணுக்கள் வெளியேறிவிடும். இதனால் உடலில் தளர்ச்சி, மனதில் அச்சம் ஏற்பட்டு மன அழுத்தத்துடனே, வேலைகளில் கவனமின்றி இருந்து வருவார்கள். இதற்கு நல்ல தீர்வை பழம்பாசி அளிக்கும். பழம்பாசி இலைகளை உலர்த்திப் பொடியாக்கி, அத்துடன் வறுத்து இடித்த ஜீரகம் மற்றும் வெந்தயம் இவற்றை ஒன்றாக்கி வைத்துகொண்டு, தினமும் காலையும் மதியமும் ஒரு தேக்கரண்டி அளவு இந்தப் பொடியை எடுத்து மோரில் கலந்து குடித்துவர, நாளடைவில், சிறுநீர் இயல்பாகக்கழியும். உடல்நலம் தேறி, மனதில் புத்துணர்ச்சி ஏற்படும்.

ஊளைச்சதை

பழம்பாசியை உலர்த்தி இடித்து தூளாக்கி, அதை தினமும் நீரில் அல்லது மோரில் கலந்து இருவேளை சாப்பிட்டுவர, தொங்கும் ஊளைச்சதை கரைந்து, இரத்த அழுத்த பாதிப்புகளை விலக்கி, இரத்த சோகையையும் குணமாக்கும். நரம்புத்தளர்ச்சி மற்றும் சுவாச கோளாறுகளையும் சரிசெய்யும் தன்மைமிக்கது, பழம்பாசி மூலிகைப்பொடி.