மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!

ஐயோ என்னோட ஸ்மார்ட் போன் கீழே விழுந்தா ஒடன்சுரும் அப்படிங்குற பயம் இனி உங்களுக்கு வேண்டாம்.

ஏர்பேக் அமைப்பைப் பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். பெரும்பாலும் கார்களில் இருக்கும் இந்த அமைப்பானது விபத்து ஏற்படும் போது அதன் தாக்கத்தைக்  குறைக்கும் வகையில் செயல்படும். காராவது என்றாவது ஒரு நாள்தான் விபத்தில் சிக்கும். ஆனால், நாம் கையில் வைத்திருக்கும் மொபைலோ தினமும் விபத்தைச் சந்திக்கிறது.

ஜெர்மனியில் இருக்கும் ஆலன் பல்கலைக்கழகத்தின் மாணவரான 25 வயது பிலிப் ஃபிரென்ஸெல் (Philip Frenzel) இதைப் போன்ற ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுத்ததன் பின்னால் அவருக்கு நடந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று இருக்கிறது. ஒரு நாள் வீட்டுக்கு வந்தவுடன் அனைவரும் செய்வதைப் போல தனது சட்டையைக் கழற்றி எறிந்திருக்கிறார். ஆனால், அவசரத்தில் அதனுள்ளே விலையுயர்ந்த ஐபோன் இருந்ததை மறந்துவிட்டார். விளைவு மொபைல் கீழே விழுந்து டிஸ்ப்ளே நொறுங்கியது.

இதையடுத்து, மெக்கட்ரானிக்ஸ் பட்டப்படிப்பை முடித்து விட்ட பிலிப், தற்பொழுது சந்தையில் இருக்கும் மொபைல் கேஸ்களை விட அதிகப் பாதுகாப்பு நிறைந்ததாக அதே வேளையில் எளிமையாக இருக்க வேண்டும் என நினைத்து இதை வடிவமைத்திருக்கிறார். இந்த ஏர்பேக் கேஸின் உள்ளே கீழே விழுவதை உணரும் வகையில் சென்சார்கள் இருக்கின்றன. அது மட்டுமன்றி சிலந்தியின் கால்களைப் போல காணப்படும் எட்டு ஸ்ப்ரிங்குகள் நான்கு மூலையிலும் இருக்கின்றன.

மொபைல் கீழே விழும்போது சென்சார் அதை உணர்ந்து ஸ்ப்ரிங்குகளை விடுவிக்கும், அவை எதிர் எதிர்த் திசையில் விரிவடையும். இதன் மூலமாக மொபைலின் பின்புறமும், முன்புறமும் நேரடியாகத் தரையில் படுவது தடுக்கப்படும். கீழே விழுந்த பிறகு வெளியே வரும் ஸ்ப்ரிங்குகளை மீண்டும் அதே போலவே மடக்கி கேஸினுள் வைத்து விட முடியும்.

இதை ஒரு முறை அல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தி ஜெர்மன் மெக்கட்ரானிக்ஸ் சொஸைட்டி (The German Mechatronics Society) இதற்கு 2018-ன் சிறந்த கண்டுபிடிப்பு எனப் பரிசளித்திருக்கிறது. இது 3D பிரின்டர் மூலமாக உருவாக்கப்பட்டிருப்பதால் இதை உருவாக்குவதற்குச் செலவும் குறைவாகத்தான் ஆகும்.

இதை தொடர்ந்து இவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவில் சமதளப் பரப்பில் இது சரியாக வேலை செய்கிறது என்பது தெரிகிறது, அதே நேரத்தில் கரடு முரடான இடங்களில் விழுந்தால் இது எந்த அளவுக்குப் பலன் தரும் என்பது கொஞ்சம் சந்தேகம்தான். இந்த ஏர் பேக் கேஸ் இன்னும் பரிசோதனை முயற்சியில்தான் இருக்கிறது. ஒருவேளை இதன் குறைகளை சரி செய்த பிறகு இதை விற்பனைக்குக் கொண்டு வரும் முடிவில் பிலிப்  இருக்கலாம். அதற்கான முதல் முயற்சியாக இதற்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கிறார்.