உடல் எடை அதிகரிப்பை சில வகை உணவுகளை எடுத்துக் கொள்ளும் டயட் முறையை பின்பற்றினால், இரண்டே வாரத்தில் குறைத்து விடலாம்.
இதற்கான வழிமுறைகள் குறித்து இங்கு காண்போம்.
இந்த டயட் முறைக்கு உங்களது உடலை முதலில் தயார் செய்வது அவசியம். உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிக்க ஏற்ற வகையில் உடலை அமைத்துக் கொள்ள வேண்டும்.
முதல் வார டயட்
காலை பானம்
காலையில் எழுந்ததும் சூடான நீர், எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்த கலவையை பருக வேண்டும். இது உங்கள் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தும். அதன் மூலம், உடம்பில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். இதனுடன் அரை தேக்கரண்டி துருவிய இஞ்சியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சை
காலை உணவை எடுத்துக் கொள்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு, பாதாம் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பாதாமில் உள்ள நார்ச்சத்துகள் உங்களது பசியை போக்கும்.
காலை உணவு
வெண்ணெய் கலக்காத டோஸ்ட் செய்த இரண்டு பிரெட், 2 வேக வைத்த முட்டை, ஒரு தம்ளர் பால் ஆகியவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இதனை அத்தியாவசியமான அளவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மதிய உணவிற்கு முந்தைய சிற்றுண்டி
காலை 11 மணியளவில் சிற்றுண்டியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கலோரி குறைந்த உணவுகளையே சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழம் தவிர மற்ற பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
மதிய உணவு
1 முதல் 1.30 மணிக்குள் மதிய உணவு சாப்பிட வேண்டும். இதில் வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், பீட்ரூட் ஆகியவற்றுடன் ஆப்பிள் சிடார் வினிகர் தூவி, அரை தட்டின் அளவிற்கு சாலட்டை தயாரித்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன், அரை கப் அரிசி சாதம், அரை கப் பருப்பு (தாளிக்காமல்), அரை பவுல் குறைவான எண்ணெய்யில் சமைத்த காய்கறிகள் மற்றும் லேசாக பொரித்த நடு அளவிலான மீன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாலை நேர Snacks
மாலை 4 முதல் 4.30 மணிக்குள் ஒரு சூடான் டீயுடன், இரண்டு பிஸ்கட் சேர்த்து சாப்பிடலாம்.
இரவு உணவிற்கு முன்
இரவு 7 மணியளவில் உப்பில்லாத அரை கப் சுண்டல் மற்றும் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து அல்லது அரை பவுல் காய்கறி சூப், மிளகு மற்றும் இஞ்சி சேர்த்து சாப்பிட வேண்டும். மிளகில் உள்ள பைப்ரைன் கொழுப்பை கரைப்பதில் சிறந்தது. எனவே இதனை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரவு உணவு
அரை கப் தயிர் சாதம் அல்லது ஒரு சப்பாத்தி, அரை பவுல் குறைந்த எண்ணெயில் சமைத்த காய்கறிகள் ஆகியவற்றை 8.30 மணிக்குள் இரவு உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உறக்கத்திற்கு முன்
அரை தேக்கரண்டி கற்றாழை ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் அரை தேக்கரண்டி இஞ்சி சாறு சேர்த்து இரவு உறங்க போகும் முன்னர் ஒரு மணிநேரத்திற்கு முன்பாக பருக வேண்டும்.
இரண்டாவது வார டயட்
முதல் வாரம் தொடர்ந்த டயட் முறைக்கு உங்கள் உடல் பழகி விடும். அதனைத் தொடர்ந்து 2வது வார டயட் முறையை மேற்கொள்ளும் போது உங்களுக்கு எளிதாக இருக்கும்.
காலை பானம்
அரை தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி தேன், சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து காலை எழுந்தவுடன் பருக வேண்டும். இது உங்களது உடலுக்கு ஆற்றலை கொடுக்கும்.
காலை உணவு
காலை உணவு கொஞ்சம் பசியை தாங்கும் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஓட்ஸை, சுண்டக் காய்ச்சிய பாலுடன் சேர்த்து சமைத்து, பாதாம் பருப்பு கலந்து அல்லது 2 சப்பாத்தி மற்றும் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்.
அதனுடன், 2 வேக வைத்த முட்டைகள், சிறிய அளவிலான பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
சிற்றுண்டி
காலை 11 மணியளவில் கீரைகள், சுரைக்காய், வெள்ளரிக்காய் சேர்த்து 1 தம்ளர் காய்கறிகள் அடங்கிய ஸ்மூத்தியை தயார் செய்து கொள்ள வேண்டும். இதனுடன் அன்னாசி பழம் போன்றவற்றை கூட சேர்த்துக் கொள்ளலாம். உப்பு மற்றும் சர்க்கரை எதுவும் சேர்க்காமல் ஒரு தேக்கரண்டி தேன் மட்டும் சேர்த்து கொள்ள வேண்டும்.
மதிய உணவு
மதியம் 1 மணிக்கு மதிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அரை கப் ரவை மற்றும் காய்கறிகள் சேர்த்த கிச்சடி இதில் கொஞ்சமாக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பழங்கள் நிறைந்த சாலட், வாழைப்பழத்தை சேர்க்க வேண்டாம்.
மாலை நேர Snacks
ஒரு 4 மணியளவில் வேக வைத்த கொண்டைக்கடலை அல்லது மக்காச்சோளம் சேர்த்து எலுமிச்சை மற்றும் உப்பு சேர்க்காமல் எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் டீ கூட எடுத்துக் கொள்ளலாம்.
இரவு உணவு
இரவு உணவை 7 மணிக்கு முன்னதாகவே முடித்துக் கொள்ள வேண்டும். அதில் பிராக்கோலி, கேரட், முட்டைக்கோஸ், காலி பிளவர் அடங்கிய 1 பவுல் காய்கறி சாலட், வேக வைத்த முட்டை சேர்த்து சாப்பிடலாம்.
இரவு உணவுக்கு பின்
இரவு 8 மணியளவில் ஒரு கப் சூடான பால் அருந்தலாம். இதனை படுக்கைக்கு போவதற்கு 2 முதல் 3 மணிநேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்ளலாம்.
உறங்குவதற்கு முன்
இரவு உறங்கப்போவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாக ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜூஸ், அரை தேக்கரண்டி பட்டை பொடி, ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
இந்த இரண்டு வார டயட் முறையில் ஒவ்வொரு முதன்மை உணவிற்கும் 3 மணிநேரம் இடைவெளியும், ஒவ்வொரு சிற்றுண்டி உணவிற்கும் 1.30 மணிநேரம் இடைவெளியும் இருக்க வேண்டும்.
இவற்றை கடைபிடித்தால் இரண்டே வாரத்தில் உங்கள் உடலில் கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும்.