அண்ணனுக்காக தற்கொலை செய்த தம்பி… இறுதியில் பலனின்றி போன சோகம்

அண்ணனுக்கு சிறுநீரகம் கொடுக்க தூக்குப் போட்டு தற்கொலை செய்த தம்பி. சடலம் அழுகியதால் உயிர் தியாகம் வீணானது.

இந்தியாவில் குஜராத் மாநிலம் வதோரா அருகே உள்ள வல்சாத் பகுதியில் உள்ள பார்டி என்ற இடத்தை சேர்ந்தவர் நைட்டிக்குமார் தான்டல் (19). இவர் வர்னமாவில் உள்ள பாரியா தொழில்நுட்ப கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது அண்ணன் கெனிஷ் (24). இவர்மீது நைட்டிகுமாருக்கு அன்பு அதிகம். இந்த நிலையில் கெனிஷ் 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து வந்தார்.

ஒரு கால கட்டத்தில் இனி ‘டயாலிசிஸ்’ செய்ய முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலை உருவானது. எனவே சிறு நீரகம் தானமாக பெற்று பொருத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

பல இடங்களில் தொடர்பு கொண்டும் சிறுநீரகம் கிடைக்கவில்லை. ஆகவே தனது சிறுநீரகங்களை அண்ணனுக்கு தானமாக வழங்க நைட்டிகுமார் முடிவு செய்தார்.

அதற்காக தான் தங்கியிருந்த விடுதி அறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அறையின் கதவு திறக்கப்படாததால் சக மாணவர்கள் பொலிசில் புகார் செய்தனர்.

உடனே அங்கு வந்த பொலிசார் அறை கதவை உடைத்து தூக்கில் தொங்கிய நைட்டிகுமாரின் உடலை மீட்டனர். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர் அதில் தனது சிறுநீரகங்களை அண்ணனுக்கு தானமாக வழங்குவதாக தெரிவித்து இருந்தார்.

மேலும், பிற உறுப்புகளை தேவைப்படுபவர்களுக்கு தானமாக கொடுப்பதாகவும் கூறி இருந்தார். 36 மணி நேரத்துக்கு முன்பு அவர் தற்கொலை செய்ததால் உடல் அழுக தொடங்கியது.

இதனால் அவரது உடல் உறுப்புகள் பயன்படாது. யாருக்கும் பொருத்த முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் மாணவர் நைட்டி குமார் தாண்டவின் தியாகம் வீணாகிப் போனது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.