ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக தான் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மற்றுமொரு கட்சிக்கு தாரைவார்க்கும் நோக்கத்தில் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு அடிப்பணித்து அப்படியான எந்த முடிவுகளையும் எடுக்க போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பதவி ஆசை காரணமாகவே அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த அணியின் சிலர் தன்னை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனக் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகியதால், ஐக்கிய தேசியக்கட்சி பலமடைந்துள்ளதே தவிர வேறு எந்த பிரதிபலன்களும் ஏற்படவில்லை. அரசாங்கத்தில் இருந்து விலகிய சுதந்திரக்கட்சியின் 16 பேர் அணியினர் மூன்று கொள்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தாம் பிரச்சினையில் வீழ்ந்து விட்டு, மற்றவர்களையும் அந்த பிரச்சினைக்குள் தள்ள சிலர் முயற்சித்து வருகின்றனர். 16 பேர் அணியில் இருக்கும் சிலர் மீண்டும் அரசாங்கத்துடன் இணைய தயாராகி வருகின்றனர்.
அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேர் தனித்து விடப்பட்டிருக்கும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யும் அரசாங்கத்தில் இருந்து விலகினால், கட்சி மூன்றாக பிளவுப்படுவது மட்டுமே நடக்கும் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.






