இலங்கையில் தனித்து விடப்பட்டுள்ள பழமை வாய்ந்த கிராமம்!

முல்லைத்தீவு – துணுக்காய் பழைய முறிகண்டி மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் வாழ்ந்து வரும் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட பழைய முறிகண்டி கிராமம் மிகவும் பழமை வாய்ந்ததாக காணப்படுகின்றது.

இருப்பினும் இந்த கிராமத்தில் அபிவிருத்திகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

இந்த பிரதேசத்திற்கான பிரதான வீதி முதற்கொண்டு எந்த வீதிகளும் இதுவரை புனரமைக்கப்படவில்லை. இங்கு காட்டு யானைகளின் தொல்லையும் அதிகளவில் காணப்படுகின்றது.

எனினும், காட்டு யானைகளை கட்டுப்படுத்த வேலிகள் அமைப்பதாக சொல்லப்பட்ட போதும், இன்று வரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

அத்துடன் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தி தரப்படாத நிலையில் அன்றாட வேலைகளை பூர்த்தி செய்வதில் கூட பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம்.

எமது கிராமமும், நாங்களும் தனித்து விடப்பட்ட நிலையில் வாழ்வை நடத்தி வருகின்றோம் என கவலையுடன் குறிப்பிட்டுள்ளனர்.