கர்நாடகாவிற்கு காலா வேண்டாம்….ரஜினிக்கு ஆப்பு வைத்த முதல்வர் குமாரசாமி!

‘காலா’ படம் வெளியாவது நல்லதல்ல என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ‘காலா’. இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் 7ஆம் தேதி, உலகம் முழுவதும் ’காலா’ படம் வெளியாகிறது.

இதற்கிடையில் கர்நாடகாவில் ‘காலா’வை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காவிரி விவகாரத்தில் ரஜினியின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்ட நீதிமன்ற நகல் இன்னும் கிடைக்கவில்லை. உத்தரவு நகல் கிடைத்தவுடன், உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.

கர்நாடகாவில் ’காலா’ படம் வெளியிடப்படுவது நல்லதல்ல. வெளியிடாமல் இருப்பதே நல்லது. ஒருவேளை படம் வெளியிடப்பட்டால், அதனால் உண்டாகும் விளைவுகளை தயாரிப்பாளரே எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.