நூறு நாள் வேலைத்திட்டத்தை தயாரித்தது யார் என்று தெரியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவிலான கூட்டு எதிர்க் கட்சியினர் கலந்தாலோசனை நடத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாதுலுவாவே சோபித்த தேரரின் 75வது பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு ஆட்சியேற்று மறு நாளே நாடாளுமன்றத்தை கலைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அதேவேளை, நூறு நாள் திட்டத்தை யார் தயாரித்தது என்று தனக்குத் தெரியாது என்றும், அது ஒரு மடத்தனமான திட்டம் என்றும் குறிப்பிட்டார். இது போன்ற பல குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக ஜனாதிபதி நேற்று முன்வைத்தார்.
இந்நிலையில் தென்னிலங்கை அரசியலில் இந்தக் கருத்துக்கள் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியினர் இது தொடர்பாக மகிந்தவின் இல்லத்தில் கலந்துரையாடியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதுவொருபுறமிருக்க, இந்தக் கலந்துரையாடலின் போது, முன்னாள் ஜனாதிபதியின் வீட்டில் இப்தார் சிறப்பு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, நோன்பு திறக்கும் நிகழ்வில் பெருமளவான இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது, மகிந்த ராஜபக்சவிற்கு மிக உயரமான விசேட இருக்கையும், மற்றவர்களுக்கு சாதாரண இருக்கையும் வழங்கப்பட்டது.
ஆனால், அந்த இருக்கையை அகற்றிவிட்டு மற்றவர்களோடு தானும் சரி சமமாக இருக்க வேண்டும் என்று, அதனை அகற்றிவிட்டு சாதாரணமாக இருந்து நிகழ்வினை சிறப்பித்திருக்கிறார்.
இது அங்கிருந்த பிரமுகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






