தாயின் ஓய்வூதியத்தை பெற அவரது உடலை பதப்படுத்திய மகன்கள்..

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பேலுபூர் பகுதியைச் சேர்ந்தவர் அமராவதி தேவி. சுங்கத்துறை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த இவருடைய கணவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதையடுத்து, அமராவதி தேவி, ரூ.40 ஆயிரம் மாத ஓய்வூதியமாக பெற்று வந்தார். அவருக்கு 5 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், அமராவதி தேவி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், பக்கத்து வீட்டுக்காரர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டபோது, ஒரு அறையில் அமராவதியின் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவரது கை பெருவிரலில் மை கறையும் இருந்தது.

அமராவதி தேவி, கடந்த ஜனவரி 13-ந் தேதியே இறந்து விட்டதும், அவரது விரல் ரேகையை பயன்படுத்தி, அவரது ஓய்வூதியத்தை பெறும் ஆசையில், 5 மகன்களும் அவரது உடலை அடக்கம் செய்யாமல், வீட்டிலேயே பதப்படுத்தி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அமராவதி தேவி உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.