மண் ஏற்றிச் சென்ற டிப்பர் தடம்புரண்டபோது தூக்கி வீசப்பட்ட சாரதியின் மீது மணல் குவிந்ததால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அவருடன் பயணித்தவர் காயமடைந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
முள்ளியவளை – நெடுங்கேணி வீதியில் நேற்றுமுன்தினமிரவு சம்பவம் இடம்பெற்றது. வவுனியா கல்மடு பகுதியைச் சேர்ந்த விவேகானந்தராசா றொபின்சன் (வயது -28) என்பவரே உயிரிழந்தார். முல்லைத்தீவு கூழாமுறிப்பைச் சேர்ந்த செல்வக்குமார் தர்சன் (வயது – 24) என்ற இளைஞன் சிகிச்சை பெற்றுவருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டது.
டிப்பர் முள்ளியவளையிலிருந்து வுனியா நோக்கி மண் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது, களிக்காட்டுப்பகுதியில் வீதியின் குறுக்கே நின்ற மாட்டுடன் மோதாமல் விலகிச்செல்ல முற்பட்டபோது வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
அதன்போதே சாரதி தூக்கி வீசப்பட அவர் மீது டிப்பரில் இருந்த மண் கொட்டப்பட்டு மூச்சுத் திணறி அவர் உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் கூறப்பட்டது.
முள்ளியவளைப் பொலிஸார் சாரதியின் உடலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த உதவியாளர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.