தினமும் காலையில் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

கூம்பு வடிவில், வித்தியாசமான நிறத்தில் இருக்கும் அத்திப்பழத்தின் நன்மைகளைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்காது. ஆனால் அதன் உலர்ந்த வடிவம் அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும். இது மிகவும் சுவையாகவும், வித்தியாசமான சுவையுடனும் இருக்கும்.

இப்பழத்தில் கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்றவை உள்ளது. இத்தகைய சத்துக்கள் நிறைந்த அத்திப்பழத்தை அல்லது உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் காலையில் ஒன்று சாப்பிட்டு வந்தால், எண்ணற்ற பலன்களைப் பெறலாம்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. அதிலும் மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் இதில் தான் நல்ல தரமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதாம்.

எலும்புகளை வலிமையாக்கும்

ஒரு உலர்ந்த அத்திப்பழமானது அன்றாடம் தேவைப்படும் கால்சியத்தில் 3 சதவீதத்தை வழங்குகிறது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால், எலும்புகள் வலிமையுடன் இருக்கும்.

நீரிழிவு

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இருப்பினும் உலர்ந்த அத்திப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால், மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மலச்சிக்கல் நீங்கும்

3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது அன்றாடம் தேவைப்படும் நார்ச்சத்துக்களின் அளவுகளில் 20 சதவீதத்தைத் தருகிறது. எனவே இவற்றை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், செரிமானம் மேம்படுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கிவிடும்.

இரத்த சோகை

உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தின் அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 2% கிடைக்கிறது. உடலில் ஹீமோகுளோபினை எடுத்து செல்வதற்கு இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.

இரத்த அழுத்தம்

உப்பு அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். இதனால் சோடியம் மற்றும் பொட்டாசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் 1 உலர்ந்த அத்திப்பழத்தில் 129 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் 2 மிகி சோடியம் உள்ளது இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

புற்றுநோய்

அத்திப்பழத்தில் உள்ள அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால், ப்ரீ-ராடிக்கல்களின் மூலம் டி.என்.ஏ பாதிப்படைவது தடுக்கப்பட்டு, புற்றுநோய் வரும் அபாயம் குறையும்.

எடை குறையும்

அத்திப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் மட்டுமின்றி, கலோரிகள் குறைவு. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளன. மற்றும் 0.2 கிராம் கொழுப்புக்கள் உள்ளது. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை ஸ்நாக்ஸாக உட்கொள்வது நல்லது.

இனப்பெருக்க மண்டல ஆரோக்கியம்

அத்திப்பழம் மிகவும் சிறப்பான ஓர் பாலுணர்வைத் தூண்டும் பழம். மேலும் அத்திப்பழம் கருவுறும் திறன் மற்றும் பாலுணர்ச்சியைத் தூண்டுவதற்கு காரணம், அதில் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது.

இதய நோய்

அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், ப்ரீ-ராடிக்கல்களினால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு இதய நோய் ஏற்படும் அபாயம் குறையும். மேலும் இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.

அழகான சருமம்

தினமும் அத்திப்பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால், அழகான மற்றும் மென்மையான சருமம் கிடைப்பதோடு, இளமையையும் தக்க வைக்கலாம்