“அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்றை எதிர்பார்த்தபோதிலும் தனக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியே வழங்கப்பட்டுள்ளது. இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.”
– இவ்வாறு இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை பிரச்சினையால் கீதா குமாரசிங்கவின் எம்.பி. பதவி பறிபோனதையடுத்து பட்டியலில் அடுத்த இடத்திலிருந்து பியசேன கமகே நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். இதையடுத்து அவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகவும் விசுவாசமானவராகச் செயற்பட்டு வருவதுடன், மஹிந்த அணியையும் விமர்சித்து வருகின்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது அவர் வாக்கெடுப்பைப் புறக்கணித்திருந்தார்.
எனவே, அமைச்சரவை மறுசீரமைப்பின்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அது நடக்கவில்லை. இதனால், அவர் அதிருப்தியில் இருக்கின்றார்.
“நான் மட்டுமல்ல, மேலும் சில சு.க. உறுப்பினர்களும் அதிருப்தியிலேயே இருக்கின்றனர். எனவே, அமைச்சுப் பதவியொன்றை வழங்குவது சம்பந்தமாக ஜனாதிபதி பரீசிலனை செய்யவேண்டும்” என்றும் பியசேன கமகே கூறியுள்ளார்.






